May 21, 2026
Thisaigal NewsYouTube
இந்திய தொழில்முனைவோருக்கு நேரடிச் சேவை: அமைச்சு  அதிகாரிகளுடன் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய தொழில்முனைவோருக்கு நேரடிச் சேவை: அமைச்சு அதிகாரிகளுடன் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

Share:

புக்கிட் மெர்தாஜாம், மே.10-

நாடு முழுவதும் இந்திய தொழில்முனைவோருக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்களான Roadshows நடத்தப்படும் போது, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் அதிகாரிகள் அந்தந்த இடத்திற்கே நேரடியாக வந்து சேவைகளை வழங்குவார்கள் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் மற்றும் மலேசிய இந்திய வர்த்தகர் மற்றும் தொழில் சபை சம்மேளனமான மைக்கி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய தொழில்முனைவோருக்கான கார்னிவல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது புக்கிட் மெர்தாஜம் எம்.பி.யுமான ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.

டத்தோ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் தலைமையில் மைக்கி முன்னெடுத்துள்ள நாடு தழுவிய தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பயணங்களுக்கு தனது அமைச்சு ஆதரவை வழங்கும் என்று ஸ்டீவன் சிம் உறுதி அளித்தார்.

வெறும் தகவல்களை மட்டும் வழங்காமல், அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு ஏஜென்சிகளை ஒருங்கமைத்து, இந்திய தொழில்முனைவோருக்குத் தேவையான தீர்வுகளையும் சேவைகளையும் அந்தந்த இடத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விழிப்புணர்வு முகாம்கள் மாநில அளவில் நடைபெறும் போது, தமது நேர அட்டவணைக்கு ஏற்ப தாமும் நேரில் கலந்து கொண்டு இந்திய தொழில்முனைவோருடன் கலந்துரையாட விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்தியத் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்குத் தமது அமைச்சின் கீழ் உள்ள 'முத்ரா' (MUDRA) திட்டத்தின் வாயிலாக 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்த வாய்ப்பினை இந்தியச் சமூகத்தினர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே 1952-ல் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புக்கிட் மெர்தாஜாம் இந்திய சங்கக் கட்டிடம் பல ஆண்டுகளாகப் பாழடைந்து கிடப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அதனை மீட்டெடுக்க முன்வந்த பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு நன்றி தெரிவித்தார்.

பாழடைந்த நிலையில் உள்ள அந்த வரலாற்றுச் சின்னத்தை மீண்டும் கட்டி எழுப்ப ஆலய நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து செயல்படுவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார். இக்கட்டிடம் இந்தியச் சமூகத்தின் அடையாளமாகவும், பொதுமக்களுக்கான பயனுள்ள மையமாகவும் மாற்றப்படும் என்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு பேசுகையில், இந்தியர் வர்த்தகர்களுக்கு தேவைப்படக்கூடிய பண வசதிகளை வர்த்தக ரீதியாக ஏற்படுத்தி தரும் ஒரு திட்டமாக இதனைத் தாம் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மைக்கி பொறுப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

Related News