வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், அங்குள்ள 123 சீனப் புதிய கிராமங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
ஜோகூர், ஜெமெந்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ங்கா கோர் மிங் , தற்போதைய மசீச- பாரிசான் நேஷனல் கிராமத் தலைவர்கள் இத் திட்டங்களைத் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், அனைத்துக் கிராமத் தலைவர்களும் ஜசெக உறுப்பினர்களாக மாற்றப்படுவர் என்றும், அதன் மூலம் திட்டங்கள் ராக்கெட் வேகத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பேராக் மாநிலத்தில் ஜசெக தலைமையில் ஆண்டுக்கு 1,000 திட்டங்கள் முடிக்கப்படுவதைச் சான்றாகக் காட்டிய அவர், ஜோகூரிலும் அதே போன்ற அதிவேக வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.








