சிலாங்கூரில் முன்மொழியப்பட்ட புதிய பன்றிப் பண்ணை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பன்றிப் பண்ணைகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து கடந்த காலங்களில் தொடர்ந்து எழுந்த அதிகப்படியான புகார்களைக் கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை முதலில் நிறுத்தி வைத்து மேலதிக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் பொது சுகாதாரத்தை பாதிப்பதோடு, அவை முறையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரஃபுடின் இத்ரிஸ் ஷா தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பன்றிப் பண்ணைகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படாது என்பதற்கான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்தப் பண்ணைகள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து மிகவும் தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








