முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் மன்னராட்சி முறை மற்றும் தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாராவைத் தொடர்புபடுத்தி முகநூலில் வெளியிட்ட பதிவைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த பதிவுக்கு எதிராக 28 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம் குமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே அச்சம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான அறிக்கைகள் வெளியிட்டதாக குற்றவியல் சட்டம் பிரிவு 505(b) மற்றும் 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இணைய வசதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக டோனி புவா மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டோனி புவா நேற்று தமது முகநூலில் வெளியிட்ட பதிவில், மன்னரின் அதிகாரங்கள் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.
அதில் மலாய் பாரம்பரிய மரபுகள், இஸ்லாம் தொடர்பான அதிகாரங்கள், மாநில மந்திரி பெசார்களை நியமித்தல் மற்றும் மாநில சட்டமன்றங்களை கலைப்பதற்கான ஒப்புதல் வழங்குதல் போன்ற அரசியல் அமைப்புச் சட்டப் பொறுப்புகள் மட்டுமே மன்னரின் அதிகார வரம்புக்குள் வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய மக்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் வகையில், மன்னர்கள், கட்டாய உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையிலான ஆட்சி முறையில் மலேசியர்கள் வாழவில்லை என்றும் டோனி புவா அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டோனி புவாவின் இந்த பதிவானது, மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா, ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வங் சியூ கீ , முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு ஆகியோரை, தேசியக் கோட்பாட்டின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








