அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களின் வருகையை தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்யும் புதிய ஓசிஆர்-விஏ (OCR-VA) முறையைப் பயன்படுத்துவதற்காக வாக்குச்சாவடிகளில் இணைய இணைப்புச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
எம்சிஎம்சி எனப்படும் மலேசியத் தொடர்புத் துறை மற்றும் பல்லூடக ஆணையமும், தேர்தல் ஆணையமும் இணைந்து இந்தச் சோதனைகளை மேற்கொண்டன.
இதில், லெசுங் பத்து வேல்ஃபேர் வளாகத்தில் உள்ள டேவான் பெஞாயாங் மண்டபத்தில் இணைய இணைப்பு போதுமானதாக இல்லாததால், அங்கு ஓசிஆர்-விஏ முறையைப் பயன்படுத்த முடியாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அந்த வாக்குச்சாவடி மாச்சாப் பாரு மாநிலத் தொகுதி மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் வளாகத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து மாநில அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ஃபைருல் நிஸாம் ரோஸ்லான் கூறுகையில், வாக்குச்சாவடிகளின் இணைய இணைப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையை எம்சிஎம்சி, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் தேர்தல் நாளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இந்த அறிக்கை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேஷனல் தேர்தல் பிரசாரக் குழுவின் தொடக்க நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாச்சாப் உம்பூ பகுதியில் உள்ள டேவான் கம்போங் பெர்மாய் மண்டபத்தில் நடைபெற்றது.
மலாக்கா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவூஃப் யுசோ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபைருல் நிஸாம், எம்சிஎம்சியின் உதவியுடன் தேர்தல் நாளில் ஓசிஆர்-விஏ முறையைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுமையாகத் தயாராக இருக்கும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.








