நாட்டின் 16-வது பொதுத் தேர்தலுடன், பினாங்கின் 16-வது மாநிலத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஜசெக மத்திய செயற்குழு விவாதிக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பினாங்கு ஜசெக மாநாட்டிற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான தீர்மானத்தை இன்றைய மாநாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று தாம் முன்மொழிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்பதை உறுதி செய்வதே இந்த முன்மொழிவின் நோக்கம் என்றும், பொதுத் தேர்தலையும் மாநிலத் தேர்தலையும் தனித்தனியாக நடத்தினால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு மாநிலத் தேர்தல்கள் மட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களிலும் கடந்த பொதுத் தேர்தலைவிட வாக்குப்பதிவு விகிதம் குறைவாக இருந்ததையும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, பொதுத் தேர்தலையும் மாநிலத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








