சரவாக் மாநிலத்தின் 13-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான 82 வேட்புமனுத் தாக்கல் மையங்களும் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மூடப்பட்டன.
ஒரு மணி நேரம் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடத் தகுதி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைத் தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
மேலும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதேவேளையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 14 நாள் தேர்தல் பிரசாரம் இன்று தொடங்குகிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, டிசம்பர் 11-ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், டிசம்பர் 8-ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும், டிசம்பர் 12-ஆம் தேதி பொது வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளன.
இந்தத் தேர்தலில் மொத்தம் 20 லட்சத்து 58 ஆயிரத்து 781 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 20 லட்சத்து 34 ஆயிரத்து 373 பேர் பொது வாக்காளர்கள், 13 ஆயிரத்து 575 பேர் ராணுவத்தினர் மற்றும் அவர்களது துணைவர்கள், 10 ஆயிரத்து 833 பேர் போலீசார் மற்றும் அவர்களது துணைவர்கள் ஆவர்.








