சரவாக் மாநிலத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சாத்து எனும் பிபிபி கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அப்துல் காரிம் ரஹ்மான் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டிசம்பரில் ஐந்தாண்டுகள் நிறைவடைவதை அவர் சுட்டிக் காட்டினார்.
மாநிலச் சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதை முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓப்பேங் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இம்மாத இறுதியில் அல்லது நவம்பரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும், சட்டப்படி 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் டிசம்பரில் தேர்தல் நடைபெறக்கூடும் என்று அப்துல் காரிம் கூறினார்.
சீனப் புத்தாண்டு ஜனவரியிலும், ரமலான் பிப்ரவரியிலும் வருவதால், அந்த மாதங்களில் தேர்தல் நடத்துவது சிரமமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








