Oct 19, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

நெகிரி செம்பிலான் மாநில டிகேயு எனப்படும் டேவான் கெஅடிலான் டான் உண்டாங் மன்றம் மற்றும் அதன் செயலாளர் ராஜா நோராஸ்லி பின் ராஜா நோர்டின் ஆகியோர், 17 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த 17 பேரில் ஏற்கெனவே நடைபெற்று வரும் வழக்கில் தொடர்புடைய ஆறு மனுதாரர்கள், மாநில மந்திரி பெசார் மற்றும் முன்னாள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக, கடந்த ஜூன் 5-ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு அமைந்துள்ளது.

அந்த உத்தரவின்படி, டிகேயு தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் ஆறு மனுதாரர்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், கடந்த மே 21-ஆம் தேதி நிலவிய சூழ்நிலையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு தற்போதும் அமலில் உள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை ஆறு மனுதாரர்களும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி, பொது வெளியில் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அதில், ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரகடனமும் யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் செல்லுபடியாகும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவு குறித்து அறிந்திருந்தும், மந்திரி பெசார் மற்றும் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அந்தப் பிரகடனத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →