கோலாலம்பூர், பிப்ரவரி.01-
மலேசியத் திருநாட்டின் ஆன்மீகக் கருவூலமாம் பத்துமலைத் திருத்தலத்தில், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் தைப்பூசப் பெருவிழா இன்று பக்திப் பேரலையெனப் பொங்கித் தொடங்கியது. 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!' எனும் பக்தர்களின் விண்ணதிரும் சரண கோஷம் திசையெங்கும் எதிரொலிக்க, அந்த ஞானப் பழத்தின் திருவருளால் பத்துமலையே கந்தன் புகழால் 'தென்னகத்துப் பழநி'யாக ஜொலிக்கத் தொடங்கியது.

இன்று அதிகாலை 7 மணி அளவில், பத்துமலைத் திருத்தலத்தின் ஆற்றங் கரையில் மங்களகரமாக நடைபெற்ற தீர்த்தோற்சவத்தைத் தொடர்ந்தும், மேற்குகை ஸ்ரீ வேலாயுதர் ஆலயத்தின் விசேஷ அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னரும், பக்திக் கடல் அலைமோதத் தொடங்கியது.
முன்னதாக, ஆற்றங்கரையில் நீராடித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பக்தர்கள், அங்குள்ள வேலை வணங்கிய பின்னர் பத்துமலையை நோக்கித் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தத் தயாராகினர்.

விடியற்காலை முதலே ஆயிரக்கணக்கான மெய்யன்பர்கள் திரண்டு வர, எழில்மிகு மயிற் காவடிகளும், நறுமணம் கமழும் பால்குடங்களும் அணிவகுக்கின்றன. மன உறுதியுடனும் ‘முருகா’ என்ற தாரக மந்திரத்துடனும் பக்தர்கள் அந்த 272 வண்ணப் படிக்கட்டுகளில் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தும் காட்சி, இப்பத்துமலைத் திருத்தலத்தையே அறுபடை வீடுகளுக்கு இணையான ஒரு ஞான பூமியாக மிளிரச் செய்கிறது.

மேற்குகையில் நின்றொளிரும் மூலவர் ஸ்ரீ வேலாயுதர் பெருமான், கண்கவர் விசேஷத் திருவலங்காரத்தில் திருவருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுமந்து வரும் பால்குடங்களால் நடைபெறும் பாலபிஷேகத்தை ஏற்றுக் கொண்டு, தன் திருமுகம் நோக்கும் மெய்யன்பர்களின் மனக்குறை தீர்த்து, நெஞ்சு குளிர அருளாசி வழங்கி கொண்டு இருக்கிறார்.

இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் சங்கமிப்பார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யப் பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். மலேசியப் போலீஸ் படையினர், தன்னார்வலர்கள், தேவஸ்தான தொண்டர்கள், மற்றும் தைப்பூசப் பணிப்படையினர் எனப் பல்லாயிரக்கணக்கானோர் ஒருமுகப்பட்டு, பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருவதை காண முடிகிறது. நெரிசலின்றி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த இவர்கள் மேற்கொண்டுள்ள சீரிய ஏற்பாடுகள், இவ்விழாவின் புனிதத்தை மேலும் மெருகூட்டுகின்றன.

பக்தர்களின் நடமாட்டத்தை எளிதாக்க இம்முறை கடைகளின் எண்ணிக்கை சற்று முறைப்படுத்தப்பட்டிருந்தாலும், தைப்பூசத்தின் அந்தப் பாரம்பரியக் கலைநயம் சற்றும் குறையவில்லை. ஆன்மீகப் பேரலை ஒருபுறம் வீச, மறுபுறம் ஒரு பெரும் திருவிழாவிற்கே உரிய குதூகலத்துடன், பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அணிவகுக்கின்றனர். வர்ணஜாலங்கள் நிறைந்த தைப்பூச கடைகளில் வலம் வருவதும், விதவிதமான தின்பண்டங்களை ருசிப்பதும், நினைவுப் பொருட்களைப் போட்டி போட்டு வாங்குவதும் இவ்விழாவிற்கு ஒரு கேளிக்கை மிகுந்த கொண்டாட்ட உணர்வைத் தந்து, பத்துமலையையே ஒரு வண்ணமயமான பூங்காவாக மாற்றியுள்ளது."

இந்த ஆன்மீகத் திருவிழாவில் சமூக ஊடகத் திருவிழாவும் கலந்திருப்பது சுவாரசியத்தை தந்துள்ளது. இம்முறை பத்துமலையில் டிஜிட்டல் பிரபலங்களான Influencers- களின் ஆதிக்கம் களைகட்டியுள்ளது. தங்கள் வர்த்தகப் பேரரசை விரிவுபடுத்த, ஆங்காங்கே பிரம்மாண்டமான அங்காடிகளை அமைத்துள்ள இவர்கள், 'நாங்களும் பிரபலம் தான்' என்பதை உரக்கச் சொல்ல, கடையின் வாசலிலேயே முகாமிட்டுள்ளனர்.

கையில் ஒரு சிறிய ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு, 'லைக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..' என்பது போன்ற அதே சமூக ஊடகத் தோரணையில் அவர்கள் பேசும் அழகைப் பார்த்து, பக்தர்கள், லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க வந்தது போல் சற்று திகைப்புடன், புன்னகையோடு கடந்து செல்கின்றனர். நேர்த்திக்கடனுக்கு நடுவே இந்த 'டிஜிட்டல்' கடமைகளையும் ஒரு சுவாரசியமான அங்கமாகவே இந்த தைப்பூச விழாவில் காண முடிந்தது.

நாளை திங்கட்கிழமை பொது விடுமுறை என்பதால், இன்று மாலை வேளையில் பத்துமலைத் திருத்தலத்தில் பக்தர்களின் வருகை பெருமளவில் உயரக்கூடும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் கணித்துள்ளது. இந்தச் சூழலை முன்கூட்டியே உணர்ந்து, டான்ஸ்ரீ ஆர். நடராஜா அவர்களின் தலைமையில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் மிக நேர்த்தியாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செய்துள்ளது. எவ்வித இடையூறுமின்றித் தரிசனம் காணச் செய்யப்பட்டுள்ள இந்தச் சீரிய மேலாண்மை, முருகப் பெருமானின் தைப்பூசத் திருவிழாவிற்கு மேலும் மெருகூட்டி, பக்தர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.








