Sep 3, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்
ஆன்மிகம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

Share:

சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் கருணைக்கடலாய் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான பிரம்மாண்ட 'சப்த இரத ஊர்வலம்' தற்போது நகரின் மாடவீதிகளில் பக்திப் பரவசத்துடனும் ஆன்மீகப் பேரெழுச்சியுடனும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை 6.31 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்கத் தொடங்கிய இந்த இரத ஊர்வலத்தில், வண்ண விளக்குகளாலும், நறுமண மலர்களாலும் கண்கவர் முறையில் அலங்கரிக்கப்பட்ட ஏழு திருத்தேர்களில் எம்பெருமானும் தெய்வங்களும் எழுந்தருளி, தங்களின் அடியார்களுக்கு மாடவீதிகளில் நின்ற கோலத்தில் பேரருள் பாலித்து வருகின்றனர்.

‘அரோகரா! சிவாய நமஹ!’ என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொடும் வேளையில், ஒட்டுமொத்த சிரம்பான் நகரமே ஆன்மீகப் பேரொளியிலும் பக்தி வெள்ளத்திலும் மிதந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழாவின் போது, ஆலயத்தின் மேலே விஷ்ணுவின் வாகனமான 'மகா கருடன்' வட்டமிட்டுப் பறந்து அடியார்களுக்குத் தரிசனம் தந்த தெய்வீகக் காட்சியும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகா பாலாபிஷேகமும், மதிய வேளையில் நடைபெற்ற மகேஸ்வர பூஜையும், மகா அன்னதானமும் இந்த மஹோற்சவத்திற்கு மேலும் ஆன்மீகப் பெருமை சேர்த்தன.

நள்ளிரவு வரை நீடிக்கவிருக்கும் இந்தத் தேரோட்ட நிகழ்வில், திரளான பொதுமக்களும் சமயப் பிரமுகர்களும் தொடர்ந்து கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெற்று வருகின்றனர்.

Related News