Aug 25, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்
ஆன்மிகம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

Share:

சிரம்பான், ஜூலை.05-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் கருணைக் கடலாய் வீற்றிருக்கும் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான பிரம்மாண்ட "சப்த இரத ஊர்வலம்" நகரின் மாடவீதிகளில் பக்திப் பரவசத்துடன் ஆன்மீகப் பேரெழுச்சியுடனும் கோலாகலமாக நடைபெற்றது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலரும், மஹிமா பேரியக்கத்தின் தலைவருமான DSK குழுமத் தலைவர் டத்தோ என்.சிவக்குமாரின் சிறப்பு வருகையுடன் மாலை 6.31 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழக்கத்துடன் தொடங்கிய இந்த இரத ஊர்வலத்தில் வண்ண விளக்குகளாலும் நறுமண மலர்களாலும் கண்கவர் முறையில் அலங்கரிக்கப்பட்ட 7 திருத்தேர்களில் எம்பெருமானும் தெய்வங்களும் எழுந்தருளி, தங்களின் அடியார்களுக்கு மாடவீதிகளில் நின்ற கோலத்தில் பேரருள் பாலித்து வந்தனர்.

‘அரோகரா’ ... சிவாய நமஹ.. என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொட்ட வேளையில் ஒட்டுமொத்த சிரம்பான் நகரமே ஆன்மீகப் பேரொளியிலும், பக்தி வெள்ளத்திலும் மிதந்தது.

சப்த இரதங்கள் புறப்பாட்டிற்கு முன்னதாக தேவஸ்தானத்தின் இந்த வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த DSK குழுமத் தலைவர் டத்தோ என் சிவக்குமாருக்கு தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஓர் முன்னுதாரண திருக்கோவில் தேவஸ்தானமாக ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானம் விளங்கி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ என்.சிவக்குமார் குறிப்பிட்டார்.

சப்த இரதங்கள் என்றால் ஏழு இரதங்கள் கடந்த ஆண்டில் ஐந்து இரதங்கள் பூட்டி, பக்திப் பரவசமூட்டிய ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானம், இம்முறை ஏழு திருத்தேர்களை பூட்டி, விழாவிற்கு சிறப்பு சேர்த்துள்ள வேளையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகங்களுடன் நல்லுறவை வளர்த்து வருவது பாராட்டக்கூடியது என்று டத்தோ சிவக்குமார் விவரித்தார்.

சிரம்பானில் பிரம்மாண்டமான பந்தல்கள் அலங்கரிக்கப்பட்ட நிலையில், தேர், பந்தல்களில் நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து, அருள்காட்சி தந்த சப்த இரதங்கள் பின்னிரவு தேவஸ்தான திருக்கோவிலை வந்தடைந்தது.

பின்னர் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழாவின் போது, ஆலயத்தின் மேலே விஷ்ணுவின் வாகனமான மகா கருடன் வட்டமிட்டுப் பறந்து அடியார்களுக்குத் தரிசனம் தந்து தெய்வீகக் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவ... | Thisaigal News