Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்
ஆன்மிகம்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

Share:

ஜார்ஜ்டவுன், மே.03-

பினாங்கு பெர்மாத்தாங் திங்கி, தாமான் பெர்வீரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 2026 முதல் 2125 வரையிலான 99 ஆண்டு கால நில உரிமைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆலய நிர்வாகத்தினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு நிலமாக இருந்த இந்த இடத்தின் மதிப்பைக் குறைத்து, வெறும் 1,000 ரிங்கிட் கட்டணத்தில் நில உரிமை வழங்க பினாங்கு மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வ நிலப் பத்திரத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்த அவர், இதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு ஆலய நிலத்தின் மீதான சட்டப்பூர்வ உரிமை உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆலயம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால், அங்கு 'கிரிகை' சடங்குகளைச் செய்வதற்கு ஏதுவாக ஒரு சிறப்புத் தளத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது 'பினாங்கு 2030' இலக்கின் ஒரு பகுதி என்றும் அவர் தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இத்தகைய கிரிகை சடங்குத் தளங்களை அமைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் இதன் போது சுட்டிக் காட்டினார்.

இதுவரை பினாங்கு மாநிலத்தில் 27 ஆலயங்கள் சட்டப்பூர்வ நில உரிமையைப் பெறத் தாம் உதவியுள்ளதாகத் தெரிவித்த அவர், அனைத்து இன வழிபாட்டுத் தலங்களின் நலன்களையும் தற்காக்க மாநில அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி அளித்தார்.

Related News

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உ... | Thisaigal News