Sep 22, 2026
Thisaigal NewsYouTube
தாய் மடி தேடி வரும் திருமுருகன்: பத்துமலையிலிருந்து வெள்ளி இரதத்தில் கோலாகலமாகப் புறப்பட்டார் அழகன் முருகன்
ஆன்மிகம்

தாய் மடி தேடி வரும் திருமுருகன்: பத்துமலையிலிருந்து வெள்ளி இரதத்தில் கோலாகலமாகப் புறப்பட்டார் அழகன் முருகன்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.02-

உலகப் புகழ்பெற்ற பத்துமலைத் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா வைபவங்களை இனிதே நிறைவு செய்த ஞானப் பழம் முருகப் பெருமான், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் தனது தாய் வீடான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயிலுக்கு வெள்ளி இரதத்தில் திருத்தலப் பயணம் தொடங்கினார்.

முன்னதாக, வள்ளி - தெய்வானை சமேதராய் நின்ற கோலத்தில் காட்சியளித்த முருகப் பெருமானுக்கு, மங்கள இசை முழங்க தேவஸ்தானத்தின் பிரதான குருக்கள் சிவகுமார் பட்டர் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்திப் பரவசமூட்டும் இந்த வழிபாட்டுச் சடங்குகள், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் மனதை நெகிழச் செய்தன.

இந்த தெய்வீக நிகழ்வில், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜாவின் துணைவியார் புவான் ஶ்ரீ மல்லிகா, தேவஸ்தான பொறுப்பாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு "அரோகரா" முழக்கத்துடன் முருகப் பெருமானை வழி அனுப்பி வைத்தனர். தாயின் மடி தேடி வரும் குமரனை வரவேற்க கோலாலம்பூர் மாநகரமே பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.

பத்துமலைத் திருத்தலத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம், ஜாலான் ஈப்போ சாலை வழியாகப் பவனி வந்து, வழிநெடுகிலும் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் மனமார்ந்த அர்ச்சனைகளையும், நெய் தீப வழிபாடுகளையும் ஏற்று மெல்ல நகர்ந்து செல்லும்.

இன்று இரவு சுமார் 8.30 மணியளவில், வெள்ளி இரதம் ஜாலான் ஈப்போ, இரண்டரை மைல் செந்தூல் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தின் எதிர்புற சாலையை வந்தடையும். அங்கு சுமார் ஒரு மணி நேரம் நிலை கொண்டு, அப்பகுதிவாழ் பக்தர்களின் அர்ச்சனைகளையும் அன்பையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் தனது பயணத்தைத் தொடரவிருக்கிறது.

Related News