Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தைப்பூச விழாவில் ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை முதலமைச்சர் அறிவித்தார்
ஆன்மிகம்

பினாங்கு தைப்பூச விழாவில் ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை முதலமைச்சர் அறிவித்தார்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-

பினாங்கு, தண்ணீர்மலை, ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்தின் வளர்ச்சிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் இன்று அறிவித்தார்.

பினாங்கில் தைப்பூச விழாவிற்கு பிரதான கோயில்களாக விளங்கும் இரண்டு ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்தின் 240 ஆவது ஆண்டு தைப்பூச விழாவாக இது விளங்குவதாக ஆலயத் தலைவர் குமரத் திரவியம் தம்மிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவ்வாலயத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை வழங்குவதாக பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

240 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட தண்ணீர்மலை, ஸ்ரீ பால தெண்டாயுதபாணி ஆலயத்தின் தைப்பூச விழாவில் சிறப்பு பிரமுகாக இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் சாவ் கோன் இயாவ் இதனைத் தெரிவித்தார்.

பினாங்கு தைப்பூச விழா மதம் கடந்து ஒற்றுமை, சுய ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வலிமையை உணர்த்துவதாக தமது உரையில் குறிப்பிட்ட சாவ் கோன் இயாவ், இது போன்ற விழா, பினாங்கு மாநிலத்தின் கலாச்சாரப் பன்முகத்தன்மை சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்றார்.

அதே வேளையில் தைப்பூச விழாவை வெகுசிறப்பாக முன்னெடுத்த ஆர்எஸ்என் ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் ஆலய நிர்வாகத்திற்கும் மாநில அரசு சார்பில் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார்.

முன்னதாக, ஆலய நிர்வாகம் சார்பில் சாவ் கோன் இயாவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் ஆலயத் தலைவர் குமாரத்திரவியத்திடம் மானியத்திற்கான காசோலையை முதலமைச்சர் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் லிம் ஹூய் யிங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related News