Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் தைப்பூசப் பெருவிழா: பக்தி பரவசத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
ஆன்மிகம்

பினாங்கில் தைப்பூசப் பெருவிழா: பக்தி பரவசத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-

பக்தர்களின் பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொட, பினாங்கு தீவே இன்று பக்தி கடலில் மூழ்கியுள்ளது. உலகப் புகழ் பெற்ற பினாங்கு தைப்பூசத் திருவிழா, தண்ணீர் மலையில் இன்று அதிகாலை முதலே மிகுந்த கோலாகலத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஜார்ஜ்டவுன் மாநகரின் வீதிகளில் ஏறக்குறைய 18 மணிநேரத்திற்கும் மேலாக வலம் வந்த முருகப் பெருமானின் திருவருள் வேல் தாங்கிய தங்க ரதமும், கருணை ததும்பும் முருகப் பெருமானின் திருவுருவம் தாங்கிய வெள்ளி ரதமும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தத்தமது இருப்பிடங்களை அடைந்தன.

தாரை தப்பட்டை முழங்க, பக்தர்கள் தேங்காய் உடைத்து வரவேற்க, தங்க ரதம் தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தையும், வெள்ளி ரதம் நாட்டுக் கோட்டை செட்டியார் ஆலயத்தையும் செம்மாந்து சென்றடைந்தன.

விடியற்காலை முதலே பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மலைக்கோயிலை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

கண்ணைக் கவரும் வண்ணமயமான காவடிகள், தலையில் சுமந்து வரும் பக்தி மணம் கமழும் பால்குடங்கள், உடல் சிலிர்க்க வைக்கும் அலகு குத்துதல் என ஒவ்வொரு பக்தரின் நேர்த்திக் கடனும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகின்றன.

தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிய முருகனுக்கு நன்றி சொல்லவும், வாழ்வில் வளம் பெறவும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் இந்த ஆன்மீகத் தியாகம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

ஆலய வளாகங்கள் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. போக்குவரத்து நெரிசலையும் கடந்து, முருகனின் தரிசனம் ஒன்றையே இலக்காகக் கொண்டு மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இப்பக்திப் பெருவிழா இன்று நாள் முழுவதும் தொடர்வதால், பினாங்கு மாநிலமே ஒரு மாபெரும் ஆன்மீகத் தலமாக மாறியுள்ளது.

Related News