Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களுடன் சீர்மிகு தைப்பூசத் திருவிழா
ஆன்மிகம்

பினாங்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களுடன் சீர்மிகு தைப்பூசத் திருவிழா

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.05-

பினாங்கில் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களின் பங்கேற்புடன் மிகவும் அமைதியாகவும், நேர்த்தியாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகத்திற்காகவும், 127 டன் தேங்காய்கள் சிதறு தேங்காய்களாகவும் பயன்படுத்தப்பட்டன.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்ட மேலாண்மை மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக மருத்துவ அவசரச் சம்பவங்கள் இம்முறை பெருமளவு குறைந்தன.

பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசப் பேருந்து மற்றும் படகுச் சேவைகளை சுமார் 10,000 பயணிகள் பயன்படுத்தினர்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தங்கத் தேர் முதலில் புறப்பட, அதனைத் தொடர்ந்து வெள்ளித் தேர் பின் தொடர்ந்தது. ஜார்ஜ்டவுன் முதல் மலைக்கோவில் வரை இந்தத் தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.

குறைந்த அளவிலான மருத்துவச் சிகிச்சைகள் தவிர, எந்தவோர் அசம்பாவிதமும் இன்றி இவ்வாண்டு தைப்பூசம் "மிகவும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான" கொண்டாட்டமாகப் பதிவாகியுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

Related News