Jul 21, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்
ஆன்மிகம்

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

Share:

பெந்தோங், பிப்ரவரி.09-

பகாங் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமரிசையாக நடைபெற்றது. சீனப் பெருமக்கள் அதிகம் வாழும் பகுதியில், அமைந்துள்ள இவ்வாலய விழாவில் இனம், மதம் பாராது திரளான மக்கள் கலந்து கொண்டது பெந்தோங் நகரின் தனித்துவமான இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றியது.

முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில், பிரம்ம முகூர்த்த வேளையில், சிவஸ்ரீ அ.ப. முத்துக்குமார் சிவாச்சாரியார் தலைமையில் 15 குருமார்கள் யாகசாலையில் திரண்டனர். அங்கு தெய்விக ஆற்றல் பெருகும் வகையில் விசேஷ ஹோமங்கள், சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் மிக நியமத்துடன் நடைபெற்றன. இந்த ஆன்மீகச் சடங்குகள் கும்பாபிஷேகத்திற்கான புனித அதிர்வுகளை ஆலயமெங்கும் பரவச் செய்தன.

அதிகாலை 6.45 மணியளவில், ஆலயத் தலைவர் சண்முகம் பெரியசாமி தலைமையில் புனித நீர் அடங்கிய குடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க ஏந்தி வந்தனர். தொடர்ந்து, ஆலயப் பொறுப்பாளர்களுடன் இணைந்து சிவஸ்ரீ முத்துக்குமார் சிவச்சாரியார் தலைமையில் குருமார்கள் ராஜகோபுரத்தின் உச்சிக்கு ஏறினர்.

வேத மந்திரங்கள் விண்ணதிர, குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' கோஷம் விண்ணை முட்ட, கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அந்தப் பக்தி முழக்கம் பெந்தோங் நகரை ஒரு ஆன்மீகக் கடலில் மூழ்கச் செய்தது.

கோபுர உச்சியில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன், வழக்கமாகச் செய்யப்படும் தீர்த்தம் தெளிக்கும் நிகழ்வு நடைபெறாமலேயே சிவாச்சாரியார்கள் கீழே இறங்கினர். தங்களின் மீது புனித நீர் தெளிக்கப்படவில்லையே என்ற ஏக்கத்துடனும், கவலை தோய்ந்த முகத்துடனும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபுரத்தையே அண்ணாந்து பார்த்தபடி காத்திருந்தனர்.

பக்தர்களின் அந்த ஏக்கம் அடுத்த சில நொடிகளில் பெரும் மகிழ்ச்சியாக மாறியது. சற்றும் எதிர்பாராத வகையில், கோபுரப் பகுதியிலிருந்து நவீனக் குழாய்கள் மூலம் புனித தீர்த்தம் 'மழைச்சாரலாக' நாலாபுறமும் பாய்ச்சப்பட்டது. சுமார் 7 நிமிடங்கள் வஞ்சகமின்றிப் பெய்த இந்த 'தீர்த்த மழையில்' நனைந்த பக்தர்கள், 'அரோகரா' கோஷமிட்டு மெய்சிலிர்த்துப் போயினர். பக்தர்களின் ஏக்கத்தைப் போக்கி, ஒவ்வொருவர் மீதும் புனித நீர் படும் வகையில் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு மற்ற ஆலயங்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகேஸ்வர பூஜைக்கு முன்னதாக, பக்தர்கள் திரளாகக் கூடி முருகப் பெருமானின் பதிகங்களை உருகிப் பாடினர். பெந்தோங் தேவாலய இந்து பரிபாலன சபாவின் நேர்த்தியான ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கும்பாபிஷேகம், பகாங் மாநில ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவானது.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்