Sep 22, 2026
Thisaigal NewsYouTube
கோலா சிலாங்கூர் ஆலயத்திற்கு நிதியுதவி: தைப்பூச விழாவில் வீ. பாப்பாராய்டு பங்கேற்பு
ஆன்மிகம்

கோலா சிலாங்கூர் ஆலயத்திற்கு நிதியுதவி: தைப்பூச விழாவில் வீ. பாப்பாராய்டு பங்கேற்பு

Share:

கோலா சிலாங்கூர், பிப்ரவரி.01-

கோலா சிலாங்கூர், இரண்டரை மைலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் இன்று நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இன்று காலை 8.30 மணியளவில் ஆலயத்திற்கு வருகை தந்த அவர், அங்கு நிலவிய ஆன்மீகச் சூழலையும், பக்தர்கள் மிகுந்த ஒழுங்குடனும் கட்டுக்கோப்புடனும் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தியதையும் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, சிலாங்கூர் மாநில அரசின் லிமாஸ் (LIMAS) திட்டத்தின் கீழ், கோலா சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு ஆலயங்களுக்கு மாநில அரசின் நிதியுதவிக்கான காசோலைகளை அவர் வழங்கினார். இத்தகைய நிதியுதவிகள், இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுத்துச் செல்ல மாநில அரசு வழங்கும் தொடர் ஆதரவின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.

இந்நிகழ்வில் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டு போன்ற அங்கங்களும் இடம் பெற்றன. ஜெரம் முக்கிம் தலைமை அதிகாரியான Penghulu Tok Rizan , ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில் தைப்பூச விழா பக்தி மணம் கமழவும், அமைதியாகவும் நடைபெற்றதற்கு பாப்பாராய்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Related News