Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்- பட்டம் வெல்ல ஜோகோவிச், அல்காரஸ் கடும் போட்டி
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்- பட்டம் வெல்ல ஜோகோவிச், அல்காரஸ் கடும் போட்டி

Share:

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. கடின தரையில் நடக்கும் இந்த போட்டியையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரசுக்கும் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா) இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் கடந்த முறை அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜோகோவிச் 2 ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் களம் காணுகிறார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலியான ஜோகோவிச் முதல் சுற்றில் 85-ம் நிலை வீரர் அலெக்சாண்ட்ரே முல்லரை (பிரான்ஸ்) சந்திக்கிறார். முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி பெற்றாலே தரவரிசையில் மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறி விடுவார்.

3 முறை சாம்பியனான ஜோகோவிச் கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சும், அல்காரசும் நேருக்கு நேர் மல்லுக்கட்டலாம். கடந்த மாதம் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரசிடம் போராடி வீழ்ந்த ஜோகோவிச் அதற்கு சின்சினாட்டி ஓபன் இறுதி சுற்றில் பழிதீர்த்தது நினைவிருக்கலாம். 36 வயதான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மகுடம் சூடும் பட்சத்தில், ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

Related News