Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பூலாவ் கெத்தாம்: கடல் மடியில் ஒரு மிதக்கும் சொர்க்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பூலாவ் கெத்தாம்: கடல் மடியில் ஒரு மிதக்கும் சொர்க்கம்

சிலாங்கூர் மாநிலத்தின் கோலக்கிள்ளான் கடற்கரையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கிறது 'நண்டு தீவு' என்று அழைக்கப்படும் பூலாவ் கெத்தாம். பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, அமைதியையும் கடல் உணவுகளையும் தேடும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு மிகச் சிறந்த இடமாகும்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீன மீனவர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தீவு, இன்று சிலாங்கூரின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் சாலைகள் அனைத்தும் சதுப்பு நிலத்திற்கு மேல் மரத்தூண்களால் தாங்கப்பட்டு, ஒரு மேடை போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. இதனால், இத்தீவு "மிதக்கும் கிராமம்" என்ற தனித்துவமான அடையாளத்தைப் பெறுகிறது.

பயண வசதிகள் என்றால் கோலக்கிள்ளான் 'போர்ட் கிள்ளான்'ரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய இந்த பெர்ரி, சுமார் 50 நிமிடங்களில் பயணிகளைத் தீவிற்கு அழைத்துச் செல்கிறது.

தவிர அதிவேகப் படகுகளும் உள்ளன. இவை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படுகின்றன. ஒரு பயணத்தில் 90 முதல் 120 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் வணிகம்

சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் வணிகம் என்று எடுத்துக் கொண்டால் வார நாட்களை விட வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் இத்தீவு மக்கள் கூட்டத்தால் களைகட்டுகிறது. தீவில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. தீவின் நுழைவாயிலிலிருந்து மேடை போன்ற தளத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட கடைகள் பயணிகளைக் கவர்கின்றன.

கடல் உணவு உணவகங்கள் அதிகமாக உள்ளன. இங்கு வரும் பெரும்பாலானோர் அதன் சுவையான மற்றும் புதிய கடல் உணவுகளுக்காகவே வருகின்றனர். நண்டு, இறால், மீன் வகைகள் போன்றவற்றை உடனுக்குடன் சமைத்து வழங்கும் ஏராளமான உணவகங்கள் இங்கு உள்ளன.

சுற்றுலாத் தங்குமிடங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. பயணிகள் தங்கிச் சென்று தீவின் அழகை ரசிக்கத் தற்கால வசதிகளுடன் கூடிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் (Homestays) ஏராளமாக உள்ளன.

கைவினைப் பொருட்கள் அதிகமான சுற்றுப்பயணிகளைக் கவர்கின்றன. கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் மற்றும் கடல் உணவு சார்ந்த நொறுக்குத் தீனிகளான மீன் பலகாரம், இறால் சிப்ஸ் இங்கு மிகவும் பிரபலம்.

தனித்துவமான வாழ்க்கை முறையைக் கொண்ட தீவாக பூலாவ் கெத்தாம் காட்சியளிப்பது, இதன் தனிச் சிறப்பைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

இந்தத் தீவில் மோட்டார் வாகனங்கள் கிடையாது. மக்கள் பெரும்பாலும் சைக்கிள்கள் அல்லது மின்சார மோட்டார் சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர். குறுகிய சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைத் தருகிறது.

வண்ணமயமான சீனக் கோயில்கள்

மேலும், இங்குள்ள வண்ணமயமான சீனக் கோவில்கள் மற்றும் மீனவர்களின் அன்றாட வாழ்க்கை முறையை நேரில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

ரயில் மூலம் கோலாலம்பூர் செண்ட்ரலில் இருந்து கே.டி.எம். கொமூட்டர் ரயில் மூலம் இறுதி நிலையமான போர்ட் கிள்ளான் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து படகுத் துறை மிக அருகிலேயே உள்ளது.

பெர்ரி சேவையில் அலிபாபா பெர்ரி அல்லது அதிவேகப் படகுகள் மூலம் தீவை அடையலாம். கட்டணம், பெரியவர்களுக்கு ஒரு வழிப் பயணம் சுமார் 15 ரிங்கிட். இரு வழிப் பயணக் கட்டணம் 25 ரிங்கிட் ஆகும். குழந்தைகளுக்கு முறையே 10 ரிங்கிட் மற்றும் 16 ரிங்கிட் வசூலிக்கப்படுகிறது.

தீவுக்குள் போக்குவரத்துகள் உள்ளன. ஆனால், கார்கள் கிடையாது. சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கலாம். ஒரு நாளைக்கு சுமார் 5 ரிங்கிட் முதல் சைக்கிள்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. மின்சார பைக் (E-Bike) உள்ளன. வேகமாகச் சுற்றிப் பார்க்க விரும்புவோர், ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 20 ரிங்கிட் அல்லது ஒரு நாளைக்கு 50 ரிங்கிட் கட்டணத்தில் மின்சார பைக்குகளை வாடகைக்கு எடுக்கலாம்.

கடல் உணவு விருந்துக்குச் சொல்ல வேண்டியதில்லை. பார்க்கும் இடமெல்லாம் கடல் வாழ் உணவுக் கடைகளாகவே தெரிகின்றன. ஜியா ஜியா ரெஸ்டாவ்ரண்ட் போன்ற உணவகங்களில் ஃப்ரெஷ்ஷான நண்டு, இறால் மற்றும் மீன் வகைகளை ருசிக்கலாம்.

பயணத்தை அழகாகத் திட்டமிடலாம்

பூவாய் கெத்தாமிற்கு வருகை தருகின்றவர்கள் கருவாடு, இறால் சிப்ஸ் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கத் தவறி விடக்கூடாது. வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் குடை, தொப்பி மற்றும் சன்ஸ்கிரீன் (Sunscreen) எடுத்துச் செல்வது நல்லது. வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது சிறப்பு.

ஒரு நாள் பயணமாக வருபவர்கள் மாலையில் கிளம்பி விடலாம். தங்கிச் செல்ல விரும்புவோர், சுங்கை லீமா, பிரதான கிராமத்திலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் இந்த அமைதியான மீனவக் குடியிருப்பிற்குச் சென்று பழமையான வாழ்க்கை முறையை ரசிக்கலாம். குடும்பத்தோடு தங்குவதற்கு வசதியான மற்றும் சுத்தமான தங்குமிடங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 180 ரிங்கிட் முதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

பாரம்பரிய மீனவ கிராமத்திலிருந்து நவீன சுற்றுலாத் தலமாக மாறியுள்ள பூலாவ் கெத்தாம், மலேசியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் இயற்கை எழிலுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குடும்பத்தோடும் நண்பர்களோடும் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு, இது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத இடமாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in கட்டுரை →