Jun 5, 2026
Thisaigal NewsYouTube
இசைத் தென்றலின் இன்னிசைப் பயணம்
கட்டுரை

இசைத் தென்றலின் இன்னிசைப் பயணம்

Share:

மலேசியத் தமிழ் இசைத் துறையின் பிதாமகன் எனப் போற்றப்படும் ‘இசைத் தென்றல்’ நா. மாரியப்பன் அவர்களின் கலைச் சேவையைப் போற்றும் வகையில், அவருக்கு மாதம் தோறும் 2,000 ரிங்கிட் வழங்கும் வாழ்நாள் ஓய்வூதியத் திட்டம் அண்மையில் பிரிக்பீல்ட்ஸில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

ஆர்.டி.எம் வாழ்நாள் சாதனையாளர் வெ. ஆறுமுகம் அவர்களின் சீரிய முன்னெடுப்பிலும் ஒருங்கிணைப்பிலும் உருவான இந்தத் திட்டம், 93 வயதை எட்டியுள்ள ஒரு மகா கலைஞனுக்குச் செய்யப்பட்ட ஆகச் சிறந்த கௌரவமாகும்.

நாகப்பன் – பொன்னம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பினாங்கில் பிறந்த மாரியப்பன், தனது நான்கு வயதிலேயே பாடத் தொடங்கினார். பினாங்கு டத்தோ கிராமாட் இந்து சபா தமிழ்ப்பள்ளியில் பயின்ற போது, ஆசிரியர் மாணிக்க முதலியார் இவருக்கு இசையின் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.

1950-களில் தமிழகம் சென்ற இவர், அங்கு நாடகத் துறையில் ஈடுபட்டு அனுபவம் பெற்றார். குறிப்பாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. டி.கே. சண்முகம் அவர்களின் பரிந்துரைக் கடிதத்துடன் தமிழகம் சென்ற மாரியப்பன், அங்கு 15 ஆண்டுகள் சினிமா, நாடகம் எனப் பல தளங்களில் இயங்கினார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'பெற்ற மகனை விற்றத் தாய்' போன்ற படங்களில் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

தாயகம் திரும்பிய பிறகு, மலாயா வானொலியில் (RTM) இவரது கலைப் பயணம் விஸ்வரூபம் எடுத்தது. வானொலித் தலைவர் டாவிட் ஹம்சா அவர்களின் ஆலோசனையின் பேரில் 'சிவரஞ்சனி' என்ற இசைக் குழுவை உருவாக்கி, அதன் தலைவராக ஏறக்குறைய 1,700 பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார்.

இவரது மென்மையான குரலால் கவரப்பட்டு 'தமிழ் இளைஞர் மணி மன்றம்' இவருக்கு 'இசைத் தென்றல்' என்ற பட்டத்தை வழங்கியது. அக்காலத்தில் ஆர்.டி.எம் வானொலியின் இந்தியப் பகுதித் தலைவராக இருந்த திரு. இரா. பாலகிருஷ்ணன் மற்றும் ஜாம்பவான்களான நாகசாமி பாகவதர், ரெ. சண்முகம் போன்றோரின் நட்பும் வழிகாட்டலும் மாரியப்பனின் இசைத் திறமையை மெருகேற்றின.

வானொலியில் மாரியப்பன் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சிகள் கடல் கடந்து வாழும் தமிழர்களின் இதயங்களைக் கவர்ந்து, உள்ளூர் இசைக்கு ஒரு தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

மாரியப்பன் அவர்கள் வெறும் பாடகராகவோ, இசையமைப்பாளராகவோ மட்டும் சுருங்கி விடவில்லை; அவர் ஒரு சிறந்த மொழிப் பற்றாளராகவும் சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார்.

இன்றைய காலத்தின் மாற்றங்களைக் கண்டு அவர் கொள்ளும் ஆதங்கம் நியாயமானது. தமிழ்மொழி சிதையாமல், உச்சரிப்புப் பிழைகளின்றிப் பேசப்பட வேண்டும் என்பதில் அவர் காட்டும் உறுதி பாராட்டுக்குரியது. தியாகராஜ பாகவதர் காலத்து இசை நுணுக்கங்களை இன்றும் விரல் நுனியில் வைத்துள்ள அவர், அன்றைய ஆசிரியர்கள் தமிழை உயிராக மதித்துப் போதித்ததை நினைவு கூர்கிறார். இக்காலப் பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மொழிப்பற்றை வளர்க்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோள், ஒரு மூத்த கலைஞனின் சமூக அக்கறையைப் பிரதிபலிக்கிறது.

இந்த உன்னதக் கலைஞன் தனது எஞ்சிய காலத்தை எவ்வித நிதி நெருக்கடியுமின்றித் தன்னிறைவோடு கழிக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த ஓய்வூதியத் திட்டத்தின் உயிர்நாடியாகும். ஆர்.டி.எம்-மில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சில நல்லுள்ளங்களின் கூட்டு முயற்சியால் திரட்டப்பட்ட இந்த நிதி, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் முன்னிலையில் மாரியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடுவதுதான் அந்தக் கலைக்கு நாம் செய்யும் உயரிய கடமையாகும். 'இசைத் தென்றல்' மாரியப்பனுக்குச் சூட்டப்பட்டுள்ள இந்த மகுடம், மலேசியத் தமிழ் கலை வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

Related News