லண்டனில் பிறந்த பிரெடெரிக் பிஷர் என்பவர், கள்ள நோட்டு மாற்றிய குற்றத்திற்காக ஆஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு தண்டனைக் காலம் முடிந்து ஒரு விவசாயியாக வாழ்ந்து வந்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகில் உள்ள அமைதியான கிராமம் கேம்ப்பெல்டவுன். அங்குள்ள ஒரு சிறிய பண்ணையில் வசித்து வந்தவர் ஓர் ஆங்கிலேயரான பிரெடெரிக் பிஷர். 1826 ஜூன் 17-ம் தேதி மாலை, பிஷர் வழக்கம் போல உள்ளூர் மதுக் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினார். ஆனால், அதன் பிறகு அவரை யாரும் உயிரோடு பார்க்கவில்லை.
பிஷர் காணாமல் போன சில நாட்களில், அவரது நண்பரான ஜார்ஜ் வோரல் ஒரு வினோதமான செய்தியை ஊர் மக்களிடம் பரப்பினார். பிஷர் தனது பண்ணை மற்றும் சொத்துக்களை வோரலிடம் ஒப்படைத்து விட்டு, லண்டனுக்குத் தப்பிச் சென்று விட்டதாக அவர் கூறினார். பிஷருக்கு ஏற்கனவே சில சட்டச் சிக்கல்கள் இருந்ததால், மக்கள் வோரலின் பேச்சை நம்பினர். வோரல் மெல்ல மெல்ல பிஷரின் நிலத்திற்குச் சொந்தக்காரரானார்.
காலம் ஓடியது. அக்டோபர் மாதம் ஓர் இருண்ட இரவு. ஜான் பார்லி என்ற விவசாயி அந்தப் பண்ணைக்கு அருகில் இருந்த ஒரு சிறிய பாலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஓர் உருவம் அமர்ந்திருப்பதை அவர் கண்டார்.
நெருங்கிச் சென்று பார்த்த பார்லி அலறியடித்துக் கொண்டு ஓடினார். அங்கே அமர்ந்திருந்தது நான்கு மாதங்களுக்கு முன் காணாமல் போன பிரெடெரிக் பிஷர்! பிஷரின் ஆவி பார்லியைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கை நீட்டி பண்ணைக்குப் பின்னால் இருந்த ஒரு சதுப்பு நிலத்தைக் காட்டி விட்டு, மெல்லக் காற்றில் மறைந்தது.
பார்லி சொன்ன கதையை ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. ஆனால் அவர் பயத்தில் நடுங்குவதைப் பார்த்த போலீசார், ஆவி காட்டிய அந்த இடத்திற்குச் சென்று தோண்டிப் பார்த்தனர். அங்கே அனைவரையும் உறைய வைக்கும் ஒரு காட்சி காத்திருந்தது.
மண்ணுக்கு அடியில் பிஷரின் உடல் சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது. அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் கோடாரியால் அடித்துக் கொல்லப்பட்டது உறுதிச் செய்யப்பட்டது.

பிஷர் ஊரை விட்டுப் போகவில்லை, அவர் கொல்லப்பட்டார் என்பது உறுதியானதும் போலீசாரின் சந்தேகம் வோரல் மீது திரும்பியது. வோரலின் வீட்டில் சோதனை செய்த போது, ரத்தம் படிந்த பிஷரின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியில், சொத்துக்காக பிஷரை அடித்துக் கொன்றதை வோரல் ஒப்புக் கொண்டார். 1827 பிப்ரவரியில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்றும் கேம்ப்பெல்டவுன் மக்கள் அந்தப் பாலத்தை "பிஷர்ஸ் கோஸ்ட் பிரிட்ஜ்" (Fisher's Ghost Bridge) என்றே அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம், பிஷரின் நினைவாகப் பிரமாண்டமான விழா அங்கு கொண்டாடப்படுகிறது.
நீதி கிடைக்காத ஒரு மனிதனின் ஆவி நேரில் வந்து கொலையாளியைக் காட்டிக் கொடுத்த இந்தச் சம்பவம், இன்றும் உலகப் புகழ் பெற்ற மர்மக் கதைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.









