தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் எழுதியுள்ள "Heart of Service: The Untold Story of Dr. M.P.L. Yegappan" என்ற ஆங்கில நூல், மலேசியாவின் தொடக்கக் கால தேசக் கட்டுமானத்தில் பெரும் பங்காற்றிய ஒரு முக்கியத் தலைவரைப் பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவாகும்.
யார் இந்த டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன்? இவர் பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் நகரின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்றத் தலைவர் மற்றும் பினாங்கு மாநிலத்தின் மெர்டேக்கா கால அமைச்சரவையில் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர்.
தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்) குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதில் தனது தந்தை முத்து பழனியப்ப செட்டியாருடன் மலாயாவிற்குக் கூலிமிற்குக் குடிபெயர்ந்தவர்.
தமிழ்நாடு, மெட்ராஸில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, செட்டியார் சமூகத்தின் முதல் மருத்துவராக மலாயாவுக்குத் திரும்பியவர். அரசியல் அதிகாரத்தைக் காட்டிலும் தனது நோயாளிகளுக்கும் சமூகத்திற்கும் சேவையாற்றுவதையே இவர் முதன்மையாகக் கருதியவர். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இவர் திகழ்ந்ததை அமைச்சர் ஸ்டீவன் சிம் எழுதிய இந்த நூல் விவரிக்கிறது.
ஸ்டீவன் சிம் இந்த நூலை எழுத சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தேசிய ஆவணக் காப்பகங்கள், நாடாளுமன்ற நூலகங்கள் மற்றும் இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தரவுகளைத் திரட்டி விரிவான ஆய்வு செய்து இருப்பதை இந்த நூல் பிரதிபலிக்கிறது. இதற்கு மேலாக டாக்டர் ஏகப்பனின் பேரனுடன் இவருக்கு இருந்த நட்பே இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணரத் தூண்டுதலாக அமைந்துள்ளது.
1950-கள் மற்றும் 60-களில் மலாயாவின் அரசியல் சூழல், மெர்டேக்காவிற்குப் பிந்தைய தொடக்கக் காலச் சவால்கள் மற்றும் ஒரு மருத்துவர் எப்படி ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்தார் என்பதை இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமாகச் சித்தரிக்கிறது.
டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் வாழ்ந்த மெர்டேக்கா கால (1950-60கள்) பினாங்கு மற்றும் புக்கிட் மெர்தாஜாம் ஒரு மிக முக்கியமான வரலாற்று மாற்றத்தின் மடியில் இருந்தது. அந்தக் காலத்தைப் பற்றிய சில கூடுதல் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த நூல்களில் அதிகமாகவே இடம் பெற்று இருப்பது தனித்துவமானச் சிறப்பாகும்.
இன்றைய மலேசிய அரசியல் வரலாற்றில் ஊராட்சி மற்றும் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், 1950-களில் பினாங்கு மாநிலம்தான் முதன் முதலில் நகர மன்றத் தேர்தல்களை (Council Elections) நடத்தி மலாயாவில் ஜனநாயகத்திற்கு வித்திட்டது. இதில் Radical Party சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவராக டாக்டர் ஏகப்பன் வரலாற்றுப் பதிவானார்.
செட்டியார் சமூகம் பாரம்பரியமாக வணிகம் மற்றும் நிதித் துறையில் (Money lending) புகழ் பெற்றிருந்தது. ஆனால், அந்த சமூகத்திலிருந்து முதன் முதலில் மருத்துவப் படிப்பு படித்து டாக்டரான பெருமை ஏகப்பனையே சாரும்.
1946-ல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு மலாயா திரும்பிய அவர், பினாங்கு பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 1948-இல் அரசாங்கம், அவரை நெகிரி செம்பிலான், தம்பின் பகுதிக்கு மாற்ற முயன்ற போது, தனது குடும்பத்திற்காகப் பினாங்கிலேயே தங்க முடிவெடுத்தார்.
1948-ல் அரசுப் பணியிலிருந்து மாற்றப்பட்ட போது, டாக்டர் ஏகப்பன் புக்கிட் மெர்தாஜாமின் முதல் தனியார் கிளினிக்கைத் தொடங்கினார். இது புக்கிட் மெர்தாஜாம் சந்தைக்கு அருகிலுள்ள 'கிராஸ் ஸ்ட்ரீட்' என்ற பகுதியில் இருந்தது. அக்காலத்தில் மலாயா முழுவதிலும் வெறும் 180 தனியார் மருத்துவர்களே இருந்தனர் என்பது வரலாறாகும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம், தமது நூலில் மிகத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார்.
பினாங்கில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் அதற்கான முன்மொழிவைத் தாக்கல் செய்தவர் டாக்டர் ஏகப்பன் என்ற வரலாற்று உண்மை , பலருக்கு தெரியாது. ஆனால், அதனைத் தனது நூலில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் அமைச்சர் ஸ்டீவன் சிம்.
இதுவே பின்னாளில் மலேசிய பல்கலைக்கழக வரலாற்றில் USM புகழ் பெற்ற மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia - USM) உருவாக அடிப்படையாக அமைந்தது என்ற அந்த நூலைப் படித்த போது எனக்கே வியப்பாக இருந்தது. யாரு...ஏகப்பனா.... பினாங்கில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அடித்தளமிட்டவர்...?
இதற்கு மேலாக மெர்டேக்கா கால பினாங்கு ஆட்சிக்குழுவில் கல்விக்கான பொறுப்பாளராக இருந்த டாக்டர் ஏகப்பன், மலாய் மொழியைத் தேசிய மொழியாக வளர்ப்பதில் தீவிர ஈடுபாடு காட்டியவர் என்பது இந்த நூலில் வரலாற்று ஆவணங்களுடன் மற்றொரு குறிப்பையும் அமைச்சர் ஸ்டீவன் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில் சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மலாய் மொழியில் பதிலளித்து, தேசிய ஒருமைப்பாட்டிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்பதும் மற்றொரு வரலாற்றுக் குறிப்பாகும்.
அன்றைய நாளில் பினாங்கின் முதல் முதலமைச்சர் வாங் போ நீ மற்றும் டாக்டர் ஏகப்பன் ஆகிய இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, நெருங்கிய நண்பர்கள் ஆவர். அதே போல், புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தந்தை இப்ராஹிம் அப்துல் ரஹ்மான், டாக்டர் ஏகப்பனை ஒரு "பண்பான மற்றும் மென்மையான மனிதர்" என்று நினைவு கூர்ந்துள்ளார்.
ஏகப்பன், தமது வாழ்நாள் இறுதி வரை புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கூலிம் பகுதிகளில் செயல்பட்டு வந்த செட்டியார் சமூகத்தின் ஆலயங்களிலும் சமூக அமைப்புகளிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அக்காலத்தில் தனியார் மருத்துவம் லாப நோக்கற்ற ஒரு சேவையாகவே இருந்தது. ஏழைகளிடம் பணம் வாங்காமல் மருத்துவம் பார்த்த பல கதைகள் உண்டு. தனது நோயாளிகளின் நலனுக்காகத் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தினாரே தவிர, அரசியலுக்காகத் தனது மருத்துவத்தை ஏகப்பன் என்றுமே கைவிட்டதில்லை.
ஏகப்பன், புக்கிட் மெர்தாஜாம் இந்தியர் சங்கத்தின் முதல் தலைவராகவும் பதவி வகித்தார். இது மருத்துவம் தாண்டி சமூக மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்கிற்குச் சான்றாகும்.
சுருங்கச் சொன்னால், 'Heart of Service' என்பது வெறும் ஒரு தனிமனிதரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; அது மலேசியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடித்தளத்தை நமக்கு நினைவூட்டும் ஒரு ஆவணமாகும். பதவிகளையும் அதிகாரத்தையும் விட, மக்கள் சேவையே ஒரு தலைவனுக்கு உண்மையான அடையாளம் என்பதை டாக்டர் எம்.பி.எல். ஏகப்பனின் வாழ்வு நிரூபிக்கிறது. மறக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைவரின் வரலாற்றை, ஈராண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகு உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் இந்த நூல், இன்றைய தலைமுறையினருக்குப் பொதுவாழ்வில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.









