மலேசியாவின் ஜோகூர் பாலம் சிமெண்ட் கட்டடம் அல்ல; அது நாள்தோறும் லட்சக்கணக்கானவர்களின் கனவுகளையும், வியர்வையையும் சுமந்து செல்லும் ஒரு வழித்தடம். ஜோகூர் மாநிலத்திலிருந்து சுமார் 3 முதல் 4 லட்சம் மலேசியர்கள் வாழ்வாதாரத்திற்காகத் தினசரி சிங்கப்பூருக்குச் செல்கின்றனர். இதில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிள்களையே தங்களின் பிரதான வாகனமாகப் பயன்படுத்துகின்றனர்.
சிங்கப்பூருக்குச் செல்லும் ஒவ்வொரு தொழிலாளரும் முடிவற்ற காத்திருப்பு நிலையாக 8 மணி நேர வேலைக்காக 13 மணி நேரம் போராட வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகின்றனர். காலை 7 மணிக்குத் தொடங்கும் பணிக்காக, ஒரு தொழிலாளி அதிகாலை 3 மணிக்கே தனது பயணத்தைத் தொடங்குகிறார். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நெரிசலில், குடிநுழைவுச் சோதனைக்காகப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
8 மணி நேர உழைப்பிற்காக, பயணத்திலேயே சுமார் 5 முதல் 6 மணி நேரத்தைச் செலவிடும் அவர்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் சோர்வுக்கு ஆளாகின்றனர். இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் ஒருவருக்கு, அடுத்த நாள் அதிகாலை எழுவதற்கான இடைவெளியில் போதிய உறக்கம் கிடைப்பதில்லை. இந்தத் தூக்கமின்மை அவர்களின் உயிருக்கே உலை வைக்கும் காரணியாக மாறுகிறது.
சாலையில் பறிபோகும் உயிர்கள் உடல் அயர்வு மற்றும் தூக்கக் கலக்கத்தினால் மோட்டார் சைக்கிளை ஓட்டும் போது, ஒரு விநாடி கவனச் சிதறல் கூட மரணத்தை விளைவிக்கிறது. நல்ல வருமானம், சொந்த வீடு, குழந்தைகளின் கல்வி எனப் பல கனவுகளுடன் வெளியேறும் குடும்பத் தலைவன், பிணமாகத் திரும்பும் போது அந்தக் குடும்பத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடுகிறது.
ஒரு விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படும் போது அக்குடும்பம் பின்வரும் துயரங்களைச் சந்திக்கிறது:
1. பொருளாதாரச் சரிவு: குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருப்பவர் உயிரிழக்கும் போது, அன்றாடத் தேவைகளுக்கே அக்குடும்பம் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
2. பிள்ளைகளின் எதிர்காலம்: தந்தையின் வருமானத்தை நம்பி உயர்க்கல்வி மற்றும் கனவுகளில் இருந்த பிள்ளைகள், பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
3. மன ரீதியான தாக்கம்: பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் குடும்பத் தலைவனின் இழப்பு மனைவியையும் முதியவர்களையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
4. கடன்கள்: வீடு அல்லது வாகனத் தவணைகளை கட்ட முடியாமல் வீட்டை இழக்கும் அபாயமும் இவர்களுக்கு ஏற்படுகிறது.
அந்நியச் செலாவணி மற்றும் அதிக வருமானம் என்பது கண்ணுக்குத் தெரிந்த பலனாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் இத்தகைய இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய எல்லைகளில் விரைவான போக்குவரத்து வசதிகள் மற்றும் போதிய ஓய்வுக்கான விழிப்புணர்வு அவசியமாகும்.
தங்களின் குடும்பத்திற்காக உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்கும் இவர்களை 'பொருளாதாரப் போர் வீரர்கள்' என்று சொன்னால் அது மிகையாகாது. இரு நாட்டு அரசாங்கங்களுக்கான ஆலோசனைகள் தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் கியூஆர் குறியீடு அடிப்படையிலான சோதனையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். இது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் வாகனத்தை விட்டு இறங்காமலேயே விரைவாகக் கடக்க உதவும்.
ஜோகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் திட்டத்தை ஆர்டிஎஸ் லிங்க் காலதாமதமின்றி முடிப்பது சாலை நெரிசலைப் பெருமளவு குறைக்கும். எல்லையைக் கடந்தவுடன் அல்லது கடப்பதற்கு முன்னதாக தொழிலாளர்கள் 15-20 நிமிடங்கள் ஓய்வெடுக்க டிரான்சிட் ரெஸ்ட் ஸோன்ஸ் உருவாக்கப்பட வேண்டும். அங்கு குடிநீர் மற்றும் முகத்தைக் கழுவிப் புத்துணர்ச்சி பெறும் வசதிகள் இருக்க வேண்டும்.
அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் காலை 7-8 மணி வேலைக்கு வருவதைத் தவிர்த்து, ஷிப்ட் முறைகளை மாற்றியமைக்கலாம். இது எல்லை நெரிசலைப் பிரிக்கும். ஊழியர்கள் சிங்கப்பூரிலேயே தங்குவதற்கு நிறுவனங்கள் ஓரளவு நிதி உதவி வழங்கினால், தினசரிப் பயணத்தின் அபாயம் குறையும். விபத்தில் சிக்கி உயிரிழக்கும் மலேசியத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உடனடி நிதி உதவி கிடைக்கச் சிறப்புப் பாதுகாப்புத் திட்டங்களை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனைகள் முடிந்தவரை மோட்டார் சைக்கிள் பயணத்தைக் குறைத்து, பேருந்து அல்லது சக ஊழியர்களுடன் காரில் பயணம் செய்வதைத் தேர்ந்தெடுக்கலாம். இது உடல் சோர்வைக் குறைக்கும். வேலை முடிந்து வீடு திரும்பியதும் சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடாமல், குறைந்தபட்சம் 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கத்தை உறுதிச் செய்ய வேண்டும். விபத்தின் தீவிரத்தைக் குறைக்கத் தரமான ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிவது அவசியம்.
குடும்பத் தலைவன் சிங்கப்பூரில் வேலை செய்யும் போது, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அவருக்குச் சரியான பெர்சனல் ஆக்சிடண்ட் இன்சுரன்ஸ் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். எல்லைக் கடந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்காக நெருக்கடி கால நிதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வருமானம் அதிகமாக வரும் போது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலப் பாதுகாப்பிற்காக ஒரு தொகையைச் சேமிப்பது இக்கட்டான சூழலில் குடும்பத்தைக் காக்கும். தவிர சிங்கப்பூர் அரசாங்கம் தனது டிஜிட்டல் குடிநுழைவுச் சோதனையை இமிகிரேசன் & செக்போயின்ஸ் ஆதாரிடி மூலம் இன்னும் எளிமைப்படுத்துவதும், மலேசிய அரசாங்கம் ஜோகூர் பகுதியில் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதும் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாகும்.








