மலேசியாவின் 'மரணச் சாலை' என்று வர்ணிக்கப்படும் காராக் நெடுஞ்சாலை, மீண்டும் ஒருமுறை தன் அமானுஷ்ய முகத்தைக் காட்டியுள்ளது. தற்போது கேமராமேனாகப் பணியாற்றி வரும் சரவணன் தசரதன் என்பவருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த அந்தச் சம்பவம், வெறும் திகில் கதையல்ல; மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய ஓர் உண்மைப் போராட்டம்.
எச்சரிக்கையை மீறிய அந்த இரவு
அன்று இரவு சுமார் 8 மணி இருக்கும். குவாந்தானில் பொருட்களை இறக்கி விட்டு, மீண்டும் கோலாலம்பூர் நோக்கித் தனியாகத் திரும்பிக் கொண்டிருந்தேன். பகாங் மாநிலத்தின் பெந்தோங் நகரைத் தாண்டி, கெந்திங் செம்பா மலைப்பகுதியை நெருங்கும் போது அந்த நெடுஞ்சாலை அடர்ந்த காடுகளுக்கிடையே ஒருவித மௌனத்தில் மூழ்கிக் கிடந்தது.
பயணத்தைத் தொடங்கும் போதே என் முதலாளி எனக்கு ஒரு கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார். 'சரவணன், காராக் நெடுஞ்சாலை சாதாரணமான இடமல்ல. நான் சொல்கிற குறிப்பிட்ட இடங்களைத் தவிர, வேறு எங்கும் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தாதே' என்று எச்சரித்திருந்தார். ஆனால், இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட உடல் சோர்வு, என் முதலாளியின் எச்சரிக்கையை மெல்ல மெல்ல மூளையிலிருந்து மறைக்கச் செய்தது.
கண்கள் செருகத் தொடங்கின. சற்றே ஓய்வெடுத்து விட்டுச் சென்றால் என்ன? என்று என் மனம் கேட்டது. அப்போதுதான் அந்த ஓய்வுத்தளம் என் கண்ணில் பட்டது. எந்தத் தயக்கமும் இன்றி, காரை அந்த ஆர்&ஆர் ஓய்வுத்தளத்திற்குள் திருப்பினேன். அங்கே காணப்பட்ட கார்களும், லாரிகளும், உணவகங்களில் தெரிந்த மனித நடமாட்டமும் எனக்குப் பெரும் நிம்மதியைத் தந்தன. அந்த நிம்மதிதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்பதை அடுத்த ஐந்தாவது நிமிடம் உணரப் போகிறேன் என்று நான் அப்போது நினைக்கவில்லை..."
பரபரப்புக்கு பின்னால் ஒளிந்திருந்த மரணம்
நான் அந்த ஓய்வுத்தளத்தின் உள்ளே சென்ற போது, எல்லாம் மிகவும் இயல்பாகவே இருந்தன. வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள், லாரிகள் என அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது. மக்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். மின்விளக்குகளின் ஒளியும், மனிதர்களின் குரல்களும் எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தந்தன. ஆனால், அந்த நிம்மதி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை என்பதுதான் கொடுமை.
கழிப்பறையைப் பயன்படுத்தி விட்டு நான் வெளியே வந்த அந்த ஒரு நொடியில்... என் உடல் நடுங்கத் தொடங்கியது. என் கண்கள் பார்ப்பதை என் மூளையால் நம்ப முடியவில்லை. மொத்த இடமும் நிசப்தமான இருளில் மூழ்கியிருந்தது. சில வினாடிகளுக்கு முன்பு நான் பார்த்த அந்தப் பரபரப்பான உணவகங்களோ, மனித நடமாட்டமோ அங்கே இல்லை!
அந்த இடமே உருமாறிப் போயிருந்தது. சுவர்கள் பாசி பிடித்து, இடிந்து விழுந்த நிலையில் இருந்தன. சுற்றிலும் செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்து, பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடமாக, ஒரு மயானம் போல் அது காட்சியளித்தது. என் கால்கள் பின்னின. அதைவிடப் பெரிய அதிர்ச்சி எனக்காக அங்கே காத்திருந்தது... நான் நிறுத்தி விட்டுச் சென்ற என் காரை அங்கே காணவில்லை! இருள் சூழ்ந்த அந்தப் பாழ்வெளியில் என் இதயம் வெடித்து விடுவது போல் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
உயிரை மீட்ட உக்கிரம்
இருள் கவ்விய அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் நான் மட்டும் அநாதையாகத் தனித்து விடப்பட்டேன். சொல்லொணா பயம் ஒருபுறம் என் தொண்டையை அடைத்தாலும், நான் ஒரு ரேலா உறுப்பினர் என்ற எண்ணம் என் மனதில் சட்டென மின்னியது. அந்தத் தைரியம் என்னைச் சிதற விடாமல் தற்காத்துக் கொள்ளத் தூண்டியது.
கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தீய சக்தி என்னைச் சூழ்ந்து கொண்டு விளையாடுவதை என்னால் உணர முடிந்தது. என் நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டு, கனத்த குரலில் அந்தப் பாழ்வெளி இருளை நோக்கி நான் சத்தமிட்டேன்.
'நான் இப்போது எங்கு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. கண்கள் மறைப்பது போல் உள்ளது. ஏதோ உணர்வு தெளிந்தவன் போல் உள்ளேன். நான் உன்னைத் தொந்தரவு செய்ய இங்கு வரவில்லை. வேலை நிமித்தமாக வந்து விட்டுப் போகிறேன். எனக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காதே. நான் வந்த பாதையிலே செல்வதற்கு வழிவிடு!'
தப்பித்தால் போதும், பறந்தேன்
நான் கத்தி முடித்த அடுத்த கணமே, என் கண்கள் தெளிவடைந்தது போலிருந்தது. மாயமாய் மறைந்திருந்த என் கார், சரியாக நான் நிறுத்தியிருந்த அதே இடத்தில் என் கண் முன்னே காட்சியளித்தது! பதற்றத்தில் என் கைகள் நடுங்க, எப்படியாவது அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று காரில் ஏறி அமர்ந்தேன்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, அந்தப் பாழடைந்த நரகத்திலிருந்து காரைச் செலுத்தத் தொடங்கினேன். என் நரம்புகள் புடைக்க, கைகள் நடுங்க ஸ்டியரிங்கை இறுகப் பற்றியிருந்தேன். அப்போது, 'காரின் பின் இருக்கையில் யாராவது அமர்ந்திருக்கிறார்களா? ஏதேனும் அமானுஷ்ய நிழல் தெரிகிறதா?' என்ற மரண பயம் என்னை ஆட்கொண்டது. மெல்லத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடியை ஏறிட்டுப் பார்த்தேன்.
முகத்தைப் பார்த்து திடுக்கிட்டேன்
அங்கே... இருளுக்குள் வேறு எந்த உருவமும் இல்லை. ஆனால், மரண பயத்தில் வேர்த்து விறுவிறுத்து, ரத்தம் சுண்டிப் போய் வெளிறிக் காணப்பட்ட என் முகம் மட்டுமே ஒரு பிணத்தைப் போலக் காட்சியளித்தது. என் சொந்த முகத்தைப் பார்த்தே நான் மேலும் திடுக்கிட்டேன்.
அடுத்த ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த உண்மையான, வெளிச்சமான ஆர்&ஆர் ஓய்வுத்தளத்தைக் கண்டதும் என் காரை நிறுத்தினேன். அங்கே நின்று கொண்டிருந்த ஒரு மூத்த லோரி ஓட்டுநரிடம் ஓடிச் சென்று, எனக்கு நடந்த சம்பவத்தை மூச்சிறைக்கக் கூறினேன். அதைக் கேட்ட அந்த லோரிக்கார அண்ணன் அதிர்ச்சியில் உறைந்து போய் என்னிடம் சொன்னார்.
உயிர் தப்பியதே பெரிய விஷயம்
'தம்பி... அந்த இடம் உங்களை இழுத்துச் சென்றிருக்கிறது. அந்தப் பழைய ஆர்&ஆர் மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. அங்கே போனவர்கள் மாயமாய் மறைந்தது குறித்து நிறைய தகவல்களை நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். நீங்கள் அங்கிருந்து திரும்பியதே பெரிய விஷயம் தம்பி!'
அவர் சொன்னதைக் கேட்டு என் உடல் மீண்டும் ஒருமுறை சிலிர்த்தது. அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் நான் பார்த்தது எதை? இன்றும் விடை தெரியாத மர்மமாக அந்த இரவு என் நினைவுகளில் உறைந்து கிடக்கிறது.
இன்றும் கெந்திங் செம்பா பகுதியைத் தாண்டும் போது, அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் சுவர்கள் சரவணனின் நினைவுகளில் ரத்தமும் சதையுமாக வந்து போகின்றன. காராக் நெடுஞ்சாலை என்பது வெறும் ரோடு அல்ல; அது பல மர்மங்களின் உறைவிடம் என்பதற்குச் சரவணனின் இந்த அனுபவமே சாட்சி.








