மலேசியாவின் வட மாநிலங்களான பினாங்கு மற்றும் கெடா இடையே நிலவி வரும் ‘நீர் உரிமை’ மற்றும் ‘நில இறையாண்மை’ தொடர்பான மோதல்கள் தற்போது நீதிமன்றப் படிகளை எட்டியுள்ளன. ஒரு பக்கம் வரலாற்று உரிமைகளை முன்னிறுத்தி கெடா மாநில அரசாங்கம் வாதிட, மறுபக்கம் அரசியலமைப்புச் சட்டத்தைக் கேடயமாகக் கொண்டு பினாங்கு தற்காத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதைச் சட்ட மற்றும் வரலாற்று ரீதியாக இங்கு காண்போம்.
நீர் உரிமைப் போராட்டம்: சுங்கை மூடா
கெடா மாநிலத்தின் உலு மூடா வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூடா ஆறு, பினாங்கின் நீர் ஆதாரத்திற்கு உயிர்நாடியாக உள்ளது. ஆனால், கெடா மாநில அரசின் வாதமானது, மூடா ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளைப் பாதுகாப்பதற்காக கெடா அரசு தனது வனப்பகுதிகளையும், பொருளாதார வாய்ப்புகளையும் தியாகம் செய்கிறது. இதற்கு இழப்பீடாக பினாங்கு மாநில அரசு, ஆண்டுக்கு 50 மில்லியன் ரிங்கிட் வழங்க வேண்டும் என்பது கெடாவின் கோரிக்கையாகும்.
இங்கு பினாங்கின் பலத்தையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. பினாங்கு அரசு 'ரிப்பாரியன் உரிமைகள்' என்ற சர்வதேச நீர்ப் பகிர்வு விதியைப் பின்பற்றுகிறது. இதன்படி, ஓர் ஆறு தனது எல்லைக்குள் ஓடும் போது, அந்த நீரைப் பயன்படுத்த அந்த மாநிலத்திற்குச் சட்டபூர்வ உரிமை உண்டு. 1985-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'கெடா - பினாங்கு எல்லை மாற்றம் சட்டத்தின்படி, மூடா ஆற்றின் நடுப்பகுதி இரு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லையாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதே வேளையில் சட்டக் கோணத்தை ஆராய்ந்தால், தற்போதைய சட்டங்களின்படி, கீழ்நிலை மாநிலம் மேல்நிலை மாநிலத்திற்கு நீர் எடுப்பதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தெளிவானச் சட்டம் மலேசியாவில் இல்லை. இது பினாங்கிற்கு வலுவான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
நில இறையாண்மை மற்றும் குத்தகை விவகாரம்
பினாங்கு மாநிலம் கெடாவிடமிருந்து பிரிக்கப்பட்ட விதம் குறித்த வரலாற்றுப் பின்னணியைக் கெடா தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, கெடாவின் வாதமானது, 1786 மற்றும் 1791-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகளின்படி, பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறை பகுதிகள் கெடாவிடமிருந்து "குத்தகைக்கு" மட்டுமே எடுக்கப்பட்டன என்று கெடா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சனூசி முகமட் நூர் வாதிடுகிறார். எனவே, பினாங்கு இப்போதும் கெடாவிற்குச் சொந்தமானது என்பது இவர்களின் வாதம்.
அதே வேளையில் முதலமைச்சர் சாவ் கோன் இயோ தலைமையிலான பினாங்கு அரசின் பலத்தையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. பினாங்கின் இறையாண்மை மலேசிய அரசியலமைப்பின் கீழ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 1957 சுதந்திர ஒப்பந்தம் மற்றும் 1963 மலேசிய ஒப்பந்தம் ஆகியவற்றில் பினாங்கு ஒரு தனித்துவமான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சட்டக் கோணத்தில் ஆராயும் போது, அரசியலமைப்புச் சட்டம் என்பது மலேசியாவின் உச்சபட்ச சட்டமாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஆவணங்களை விட, நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டமே நீதிமன்றத்தால் பெரிதும் மதிக்கப்படும். அண்மையில் சூலு சுல்தானின் வாரிசுகள் சபா மீது தொடுத்த உரிமை கோரல் நிராகரிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாக வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நீதிமன்றத்திற்கு இந்த வழக்குச் செல்லும் பட்சத்தில், சட்ட ரீதியாக பினாங்கு மாநிலம் மிகவும் பலமான நிலையில் உள்ளது. ஏனெனில், மலேசிய அரசியலமைப்புச் சட்டம் பினாங்கின் இறையாண்மையை முழுமையாகப் பாதுகாக்கிறது.
நீர் உரிமை விவகாரத்தில், பினாங்கு தனது எல்லைக்குள் ஓடும் நீரை எடுப்பதால் கட்டணம் செலுத்த வேண்டிய சட்டக் கடப்பாடு தற்சமயம் இல்லை. இருப்பினும், கெடா மாநிலம் முன்வைக்கும் "நீர்ப் பிடிப்பு பகுதிகளைப் பாதுகாக்கும் பொருளாதாரச் சுமை" என்ற வாதம் தார்மீக ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சட்டத்தின் பார்வையில் பினாங்கு மாநிலம் வலுவான நிலையில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை வெறும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மட்டுமே தீர்த்துவிட முடியாது என்பதே அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும். "நீதிமன்றத் தீர்ப்பு ஒரு தரப்பிற்கு வெற்றியைத் தரலாம், ஆனால் அது இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவைச் சிதைக்கக்கூடும்" என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆய்வாளர்கள் முன்வைக்கும் சில முக்கியக் காரணங்களையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. கெடா மாநிலம் தனது காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே பினாங்கிற்குத் தடையின்றி நீர் கிடைக்க முடியும். எனவே, பினாங்கு சட்டபூர்வமாகப் பணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், காடுகளைப் பாதுகாப்பதற்கான நிதிச் சுமையைக் கெடா மட்டுமே சுமப்பது நீண்ட கால அடிப்படையில் சாத்தியமற்றது.
மத்திய அரசின் பங்கு
மத்திய அரசு தலையிட்டு, இரு மாநிலங்களுக்கும் ஒரு 'வெற்றி-வெற்றி' சூழலை உருவாக்க வேண்டும். குறிப்பாக, நீர்ப் பிடிப்பு பகுதிகளைப் பாதுகாக்கும் கெடா மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதியுதவிகளை வழங்குவதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.
வட மாநிலங்களுக்கான மண்டல வளர்ச்சி என்பது பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் வடக்கு பேராக் ஆகிய மாநிலங்கள் பொருளாதார ரீதியாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தின் அதிருப்தி ஒட்டுமொத்த வடக்கு மண்டல வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும்.
எனவே வரலாற்றுப் பெருமிதங்களுக்கும் சட்ட நுணுக்கங்களுக்கும் அப்பால், மக்களின் அடிப்படைத் தேவையும் நாட்டின் ஒற்றுமையுமே முதன்மையானது. எனவே, நீதிமன்றக் கூண்டுகளில் முட்டி மோதுவதை விட, மத்திய அரசின் மேஜையில் அமர்ந்து பரஸ்பர மரியாதையுடன் பேசி முடிவெடுப்பதே இரு மாநிலங்களுக்கும், குறிப்பாக மலேசிய மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும்.








