May 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ரிங்கிட்டின் அசுர வளர்ச்சி: பொருளாதாரச் சரிவும் மீட்சியும் - ஒரு முழுப் பார்வை
கட்டுரை

மலேசிய ரிங்கிட்டின் அசுர வளர்ச்சி: பொருளாதாரச் சரிவும் மீட்சியும் - ஒரு முழுப் பார்வை

Share:

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அண்மையக் காலங்களில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வருவது மலேசியப் பொருளாதாரத்தில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராகக் கடும் சரிவைச் சந்தித்த ரிங்கிட், தற்போது குறிப்பிடத்தக்க அளவில் மீட்சியடைந்து வருவது நாட்டின் நிதி நிலைத்தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

இந்த வலுவடைதல் போக்கு தொடரும் பட்சத்தில், இவ்வாண்டு இறுதிக்குள் மலேசிய ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராகத் தோராயமாக 4.10 முதல் 4.25 என்ற நிலையை எட்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சில நிபுணர்கள் நாட்டின் சீர்திருத்தங்கள் சரியாக அமையும் பட்சத்தில் இது 4.00 ரிங்கிட் என்ற உளவியல் ரீதியான முக்கிய எல்லையைத் தொடவும் வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர். இந்த அதிரடியான முன்னேற்றத்திற்கு மலேசியாவின் வலுவான ஜிடிபி வளர்ச்சி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் தொடர்ச்சியான வரவு மற்றும் மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் வட்டி விகிதங்களை மாற்றாமல் நிலை நிறுத்தியுள்ளது போன்றவை மிக முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

ரிங்கிட்டின் இந்த வளர்ச்சியை முழுமையாகப் புரிந்து கொள்ள கடந்த 20 ஆண்டு கால அதன் வரலாற்றுப் பயணத்தைப் பார்ப்பது அவசியமாகும். 1997-98 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, மலேசிய ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.80 என்ற நிலையில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் 2005-இல் இந்த நிலை நீக்கப்பட்டு சந்தை விலைக்கு விடப்பட்ட போது, ரிங்கிட் படிப்படியாக வலுவடைந்து 2011-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் 2.90 முதல் 3.00 என்ற மிக வலுவான நிலையை எட்டியது.

இதுவே கடந்த இரு தசாப்தங்களில் ரிங்கிட்டின் பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2015-க்குப் பிறகு உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் உள்நாட்டு அரசியல் மாற்றங்களால் ரிங்கிட் கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

குறிப்பாக 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு டாலருக்கு எதிராக 4.70 முதல் 4.80 வரை சரிந்து, 1998-க்குப் பிந்தைய மிக மோசமான நிலையைத் தொட்டது. தற்போது அந்த அதலபாதாளத்திலிருந்து மீண்டு, மீண்டும் 4.15 - 4.30 என்ற நிலைக்கு முன்னேறியிருப்பது ஒரு மிகப் பெரிய பொருளாதாரத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய முதலீட்டாளர்களை மீண்டும் வளரும் நாடுகளின் சந்தையை நோக்கித் திருப்பியுள்ளது. இதில் மலேசியாவின் தெளிவான பொருளாதாரக் கொள்கைகள், அரசியல் நிலைத்தன்மை மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் நிதிச் சீர்திருத்தங்கள் ஆகியவை ரிங்கிட்டிற்கான உலகளாவிய தேவையை அதிகரித்துள்ளன.

ரிங்கிட் வலுவடைவதால் நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார நிலைத்தன்மை கணிசமாக மேம்படும். குறிப்பாக, மலேசியா ஒரு பெரிய அளவிலான இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடு என்பதால், கரன்சி மதிப்பு உயரும் போது இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், கச்சாப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப இயந்திரங்களின் விலை குறையத் தொடங்குகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்கத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை ஒரு சீரான பாதையில் கொண்டுச் செல்ல உதவும்.

மக்களின் அன்றாட வாழ்வியலைப் பொறுத்தவரை, வலுவான ரிங்கிட் என்பது அவர்களின் வாங்கும் சக்தியை நேரடியாக உயர்த்தும் ஒரு காரணியாகும். கடந்த ஆண்டு ரிங்கிட் சரிந்திருந்த போது ஒரு பொருளை வாங்க மக்கள் அதிகப் பணம் செலவிட வேண்டியிருந்தது; ஆனால் இப்போது அதே பொருளைக் குறைந்த விலையில் பெற முடிகிறது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அன்றாடத் தேவைகளான பால் பொருட்கள், கோதுமை, இறைச்சி மற்றும் மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை குறையும் போது, சராசரி மலேசியக் குடும்பங்களின் மாதாந்திர செலவினங்கள் குறையத் தொடங்கும்.

சில்லறை வர்த்தகத்தில் விலைக் குறைப்பின் முழுப் பலனும் பயனீட்டாளர்களை வந்தடையச் சப்ளை செயின் மற்றும் கையிருப்பில் உள்ள பழைய சரக்குகளின் காரணத்தால் சிறிது காலம் எடுக்கலாம். ஆயினும், நீண்ட கால அடிப்படையில் இது பயனீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும்.

மேலும், மலேசிய மக்கள் இதன் மூலம் பல நேரடிச் சாதகங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுக் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் சர்வதேசச் சந்தையில் பொருட்களை வாங்குபவர்கள் குறைந்த ரிங்கிட்டில் அதிகப் பலன்களைப் பெற முடியும்.

உதாரணமாக, ஒரு மாணவர் வெளிநாட்டில் கல்வி கற்க 10,000 டாலர் தேவைப்படுகிறது என்றால், ரிங்கிட் 4.80-ஆக இருந்த போது செலுத்த வேண்டிய 48,000 ரிங்கிட்டிற்குப் பதிலாக, இப்போது 4.20-ஆக இருக்கும் போது 42,000 ரிங்கிட் செலுத்தினால் போதுமானது. இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்கும்.

உள்நாட்டுத் தொழில்துறையைப் பொறுத்தவரை, உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குச் செலவு குறையும். இது அவர்களின் லாப வரம்பை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். சுருக்கமாகச் சொன்னால், வலுவான ரிங்கிட் என்பது வெறும் கரன்சி மதிப்பு உயர்வு மட்டுமல்ல, அது மலேசியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும், சர்வதேச அரங்கில் நாட்டின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும். வரும் மாதங்களில் உலகளாவிய பொருளாதாரச் சூழல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், மலேசிய ரிங்கிட் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டு நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Related News