அங்கீகரிக்கப்படாத போலி ஹலால் முத்திரையைப் பயன்படுத்தி இணையம் மூலமாக சலவை சோப்பு தயாரித்து விற்பனை செய்து வந்த தொழிற்சாலை ஒன்றைச் சிலாங்கூர் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையிட்டனர்.
குடிநுழைவுத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுச் சோதனையில், அதிகாரிகளால் சான்றளிக்கப்படாத ஹலால் முத்திரை அச்சிடப்பட்டிருந்த 31,140 சலவை சோப்பு பொட்டலங்கள், 40,000 நெகிழி பைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இப்பொருட்களின் மொத்த மதிப்பு 2,15,700 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.



பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, அங்கு பணிபுரிந்த ஐந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும், அந்நிறுவனத்தின் உள்ளூர் இயக்குநர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில் முறையான ஆவணங்கள் இல்லாத ஐந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அடுத்தகட்ட விசாரணைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள சிலாங்கூர் கேபிடிஎன், இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 2,00,000 ரிங்கிட் வரையிலும், தனிநபருக்கு 1,00,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.











