Jul 15, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் ஹிப்பி பார்ட்டி சர்ச்சை: அனுமதியின்றி நடத்திய ஏற்பாட்டாளருக்கு 25 ஆயிரம் அபராதம்
தற்போதைய செய்திகள்

கிளந்தான் ஹிப்பி பார்ட்டி சர்ச்சை: அனுமதியின்றி நடத்திய ஏற்பாட்டாளருக்கு 25 ஆயிரம் அபராதம்

Share:

கிளாந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு பகுதியில் ஆற்றங்கரையோர உணவகத்தில் நடைபெற்ற 1960, 1970 மற்றும் 1980-களின் ஹிப்பி கருப்பொருளிலான ரெட்ரோ டிஸ்கோ நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் ஏற்பாட்டாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஃபைகாஷா காகா என்ற பெயரில் பேஸ்புக்கில் தன்னை அடையாளப்படுத்தியுள்ள பெண் ஒருவர், கிளாந்தான் மாநில அரசாங்கத்தின் சட்டங்களையும் விதிமுறைகளையும் தாம் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் வைரலான பதிவுகள் அந்த நிகழ்ச்சியை தவறாக சித்தரித்துள்ளதாகவும், அது பொதுமக்களுக்கான நிகழ்ச்சி அல்ல என்றும், குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்ட சிறிய தனியார் சந்திப்பு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் திருமணமான தம்பதிகள், குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் என்றும், இது காதல் சந்திப்புகளுக்கோ, மது அருந்தும் நிகழ்வுக்கோ அல்லது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட இடமோ அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணமானது, உணவு, அரங்கு வாடகை மற்றும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட விளையாட்டுகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே வசூலிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையில், கோத்தா பாரு நகராட்சி மன்றம், பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உரிய அனுமதியின்றி நடத்தியதற்காக அந்த வளாகத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related News