நாடெங்கிலும் புதிய மற்றும் ஏற்கனவே பயிலும் மாணவர்கள் உட்பட மொத்தம் 96 ஆயிரத்து 13, ஆறாம் படிவ மாணவர்களுக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான ஆரம்பப் பள்ளிச் செலவு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக 14.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள 616 ஆறாம் படிவ மையங்களில் புதிதாக சேரும் 52 ஆயிரத்து 810 மாணவர்கள், தலா 150 ரிங்கிட் வீதம் இந்த ஆண்டு உதவித்தொகையைப் பெறுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக ஆறாம் படிவத்தில் சேர்ந்த மாணவர்களுக்கான ஆரம்பப் பள்ளிச் செலவுத் உதவித்தொகையானது, கடந்த ஜூன் 28 முதல் நாடு முழுவதும் உள்ள 616 ஆறாம் படிவ மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உதவித்தொகை வழங்கும் நடவடிக்கை வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை தொடரும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஆறாம் படிவ மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகையை விரிவுபடுத்த அரசாங்கத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 8-ஆம் தேதி சேர்க்கை பெற்ற புதிய மாணவர்களுக்கும் தற்போது இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








