கூட்டரசு அரசாங்கத்தில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் நிலை “சாண்ட்விச்சின் நடுவில் இருப்பதைப் போன்றது” என்று துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான எளிய பெரும்பான்மை கிடைக்காததால், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் அவசியத்தின் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிசான் நேஷனல் தலைவராக, முன்பு அரசியல் எதிரிகளாக இருந்த கட்சிகளுடன் இணைந்து, பணியாற்ற வேண்டிய பொறுப்பை தொழில்முறை அணுகுமுறையுடன் ஏற்றுக்கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கூட்டரசு அரசாங்கத்தில், ஒரு புறம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், மறுபுறம் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கும் இருப்பதால் அவர்களுக்கு நடுவில் தாம் இருப்பதாக ஜாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் மாமன்னரின் ஆணையின் பேரிலேயே இந்த ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு கோத்தா மாசாய் பகுதியில் நடைபெற்ற பாரிசான் நேஷனல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அஹ்மட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.








