கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 17 லட்சம் ரிங்கிட் என கண்டறியப்பட்ட நிலையில் இப்போது போலீசாரின் கவனம் மூன்று சந்தேக நபர்கள் மீது திரும்பியுள்ளது!
நேற்று கெந்திங் ஹைலண்ட்ஸில் நடந்த துணிகர நகைக்கடை கொள்ளையில் மூன்று முகமூடி அணிந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்கை அவென்யூ வணிக வளாகத்தில் உள்ள சௌ தாய் ஃபுக் நகைக்கடையில் நடந்த கொள்ளை தொடர்பான சி.சி.டிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய சொகுசு பி.எம்.டபிள்யூ கார், சிலாங்கூர், அம்பாங் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் கொள்ளையர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் வெறும் இரண்டு நிமிடங்களில் 81 நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர். அவற்றின் மொத்த எடை 2.5 கிலோ என்றும், மதிப்பு 17 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரிங்கிட் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க கெந்திங் ஹைலண்ட்ஸ் மற்றும் பத்தாங் காலி செல்லும் சாலையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும், அவர்கள் அதற்குள் அப்பகுதியை விட்டு தப்பியிருந்தது சி.சி.டிவி ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த மூன்று பேர் யார்? பி.எம்.டபிள்யூ காரை பயன்படுத்தியது எப்படி? — இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.








