Aug 28, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு
அரசியல்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

Share:

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பதவியேற்ற பிறகு, மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று திங்கள்கிழமை இஸ்தானா நெகாரா அரண்மனையில் அவருக்கு அரச மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் தனது துணைவியார் ஜேன் இத்தோகி உடன் இஸ்தானா நெகாராவை வந்தடைந்த அதிபர் தர்மனை, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஜாரித் சோஃபியா ஆகியோர் வரவேற்றனர்.

இந்த நிகழ்வில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர்கள் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹிட் ஹமிடி, டத்தோ ஸ்ரீ ஃபடிலா யூசோஃ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரண்மனையின் அணிவகுப்பு அரங்கில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், ராயல் மலாய் ரெஜிமென்டின் மத்திய இசைக்குழுவானது, மலேசியா, சிங்கப்பூரின் தேசிய கீதங்களை இசைத்தது.

அதனைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அரச மரியாதையும் செலுத்தப்பட்டது.

சிங்கப்பூர்–மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த அதிகாரப்பூர்வப் பயணம் இரு நாடுகளுக்கு இடையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இன்று தொடங்கி வரும் ஜூலை 15-ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் அதிபர் தர்மன் மலேசியாவில் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு முக்கியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News