Sep 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!
சிறப்பு செய்திகள்

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

மலேசிய இந்திய சமூகத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்கும் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் 14 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். மலேசிய இந்திய சமூகப் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா வழியாக 'தர்மா மடானி' நிதியின் கீழ், 300 இந்து ஆலயங்களுக்குத் தலா 20 ஆயிரம் ரிங்கிட் வீதம் மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே முதற்கட்டமாக 155 ஆலயங்கள் பயனடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் 1,000 இந்து ஆலயங்களுக்கு இந்தத் தர்மா மடானி நிதி நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஆன்மீக மேம்பாட்டுடன் மாணவர்களின் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு, 8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 'கல்வி மடானி' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பகுதி நேர டியூஷன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு மாணவரும் கல்வியில் பின்தங்கி விடக்கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், எஸ்பிஎம் தேர்வில் 5 ஏ-க்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்குத் தனது சேவை மையம் சார்பில் சிறப்பு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 300 பேருக்குத் தனது சேவை மையத்தின் வழி உணவுப் பொருட்களையும் மைடின் பேரங்காடி பற்றுச் சீட்டுகளையும் வழங்கிய அமைச்சர், மித்ரா நிதி எந்தவொரு இடைத் தரகர்களும் இன்றி நேரடியாகச் சமூகத்தைச் சென்றடைவதை மீண்டும் உறுதிப்படுத்தினார். அமைச்சரின் இந்தச் செயல்பாடு, இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related News