
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வேளையில், நடப்பு பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்தின் கீழ் மாநில மக்களின் சமூக, பொருளாதார நல்வாழ்வுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் அளப்பரியவை. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் பல முற்போக்கானத் திட்டங்கள் இங்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் திட்டத்தின் கீழ், ஏழை எளிய குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்குத் தேவையான மாதாந்திர மற்றும் அவசரகால நிதியுதவிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற அண்டை மாநிலங்களை எளிதில் இணைக்கும் வகையிலான நவீனப் போக்குவரத்து வசதிகள், கிராமப்புறச் சாலைகளின் விரிவாக்கம் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பெருமளவில் நவீனப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, மாநிலத்தின் மூத்த குடிமக்களைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் விழாக் கால மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையிலும், நெகிரி செம்பிலான் மாநில அரசு 'ஸ்கிம் செஜத்ரா ராக்யாட்' கொள்கையின் கீழ் ஒரு சிறப்புத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன்படி, மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் வசிக்கும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு முறை வழங்கப்படக்கூடிய 200 ரிங்கிட் ரொக்க உதவி நேரடியாக வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி சேவை மையங்கள் மற்றும் N9 டிஜிட்டல் செயலி வாயிலாக ஒருங்கிணைக்கப்படும் இந்த 200 ரிங்கிட் நிதியுதவி, குறிப்பாக ஹரிராயா, சீனப் புத்தாண்டு, தீபாவளி போன்ற அந்தந்த இனத்தவர்களின் முக்கிய விழாக் காலங்களுக்குச் சற்று முன்பாகவே அவர்களின் கைகளில் நேரடியாகச் சென்றடைவதை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் தலைமையிலான அரசு உறுதிச் செய்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 37,537 மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள வேளையில், நடப்பு 2026-ஆம் ஆண்டிலும் இந்த விழாக் கால நிதியுதவி எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற அடிமட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கான கல்வி மேம்பாட்டு பேராதரவு மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக விழாக் கால ஊக்கத்தொகை ஆகிய அனைத்தும் நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மக்களின் நல்வாழ்விற்கு வழங்கியுள்ள உச்சக்கட்ட ஏற்றத்திற்கான மிகச் சிறந்த சான்றுகளாகும்.










