Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது
சிறப்பு செய்திகள்

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

Share:

மலேசிய இந்திய வர்த்தக தொழில்துறை சங்கங்களின் சம்மேளனமான மைக்கியும், பகாங் மாநில இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமும் இணைந்து பகாங் மாநில இந்திய வர்த்தகர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தின.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெமர்லோவில் உள்ள ஹோட்டல் கிரீன் பார்க்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பகாங் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய மற்றும் சிறுதொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மலேசிய இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியுதவிகள், மானியங்கள் மற்றும் வணிகக் கடன்கள் ஆகியவை தகுதி வாய்ந்த அனைத்து இந்திய வணிகர்களுக்கும் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த "முத்ரா ரோட்ஷோ" (MUDRA Roadshow) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

TEKUN Nasional, SME Bank, SME Corp Malaysia, Amanah Ikhtiar Malaysia, Bank Rakyat, SKM எனப்படும் மலேசிய கூட்டுறவு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பகாங் மாநில இந்திய வர்த்தகர்களுக்கு விளக்கம் அளித்தாக பகாங் மாநில மைக்கியின் துணைத் தலைவர் சிதம்பரம் வேலுசாமி தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கக்கூடிய இத்தகைய நிதி உதவி வாய்ப்புகளை பகாங் மாநில இந்திய வர்த்தகர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே இந்த விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டதாக மைக்கியின் தேசிய உதவித் தலைவரும், பகாங் மாநில மைக்கியின் செயலாளருமான ராமு நாய்டு பிந்தியா தெரிவித்தார்.

"ஒரு படி இன்று, ஆயிரம் வாய்ப்புகள் நாளை" என்ற தாரக மந்திரத்தோடு நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறு வணிகர்கள் தங்களின் தற்போதைய தொழில் சவால்களை எதிர்கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு எப்படி நகர வேண்டும் என்பது குறித்து இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News