ஒரு நாட்டில் பெய்யும் மழை குறைவது, இன்னொரு நாட்டில் கடும் வெப்பம் நிலவுவது அல்லது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் ஒரு போர் வெடிப்பது மலேசியாவில் நாம் வாங்கும் அரிசி, காய்கறி, கோழி, முட்டை அல்லது சமையல் எண்ணெயின் விலையை எவ்வாறு பாதிக்க முடியும்?

பயனீட்டாளர்களுக்கு இது தொலைதூரமான உலகச் செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உணவுப் பொருள் வயலில் இருந்து நமது சமையலறையை அடையும் வரையில் கடக்கும் பாதையைப் பார்த்தால், உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் விநியோகச் சிக்கல் எவ்வாறு மலேசியச் சந்தையையும் படிப்படியாகத் தாக்க முடியும் என்பது புரியும்.
இது, எல்லா உணவுப் பொருட்களின் விலையும் ஒரே நேரத்தில் கடுமையாக உயரும் என்று அர்த்தமல்ல. ஆனால் உலகளாவிய உணவு விநியோகத்தில் ஏற்படும் நீடித்த அழுத்தங்கள், குறிப்பிட்ட சில பொருட்களின் உற்பத்திச் செலவையும் விலையையும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

வானிலை மாற்றம் உணவு உற்பத்தியை எவ்வாறு பாதிக்கிறது?
உணவு உற்பத்திக்கு நிலம் மட்டுமல்ல, தண்ணீர், சீரான வானிலை மற்றும் போதுமான உற்பத்தி உள்ளீடுகளும் அவசியம். கடுமையான வெப்பம், நீண்டகால வறட்சி அல்லது அதிகப்படியான மழை போன்ற பாதகமான வானிலை நிலவரங்கள் விவசாய உற்பத்தியைக் குறைக்கலாம். குறிப்பாக எல் நினோ போன்ற வெப்பமான மற்றும் வறட்சியான காலநிலை நிலவரங்கள் பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதை பாதித்து விளைச்சலைக் குறைக்கக்கூடும்.
இதன் தாக்கம் தாவர உணவுப் பொருட்களுடன் மட்டும் நின்றுவிடாது. கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் வெப்ப அழுத்தம் ஏற்படும் போது அவற்றின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படலாம். ஒரு பெரிய உற்பத்தி நாடு குறைந்த அளவு உணவை உற்பத்தி செய்தால், உலகச் சந்தையில் கிடைக்கும் மொத்த விநியோகம் குறைந்து, இறக்குமதி செய்யும் நாடுகள் குறைந்த அளவிலான பொருட்களுக்காக அதிக போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒரு நாட்டின் ஏற்றுமதித் தடை ஏன் உலகை பாதிக்கிறது?
உணவு உற்பத்தி குறைவது மட்டுமே பிரச்சினையல்ல. ஒரு நாடு தனது உள்நாட்டு தேவையைப் பாதுகாக்கும் நோக்கில் அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் அல்லது பிற முக்கிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தால், சர்வதேசச் சந்தையில் கிடைக்கும் விநியோகம் மேலும் குறையலாம்.
அப்போது அந்தப் பொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மாற்று விநியோகஸ்தர்களைத் தேட வேண்டியிருக்கும். குறைந்த அளவிலான பொருட்களுக்காக அதிக நாடுகள் போட்டியிடும் போது, சர்வதேச விலைகளில் அழுத்தம் ஏற்படலாம்.
அதனால் ஒரு நாட்டின் முடிவு, அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டுமே முடங்கிவிடுவதில்லை. உலகளாவிய உணவுச் சந்தை ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், அதன் தாக்கம் வேறு நாடுகளுக்கும் சென்றடையலாம்.

உணவின் விலை வயலில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை
ஒரு கிலோ காய்கறி அல்லது ஒரு கோழியின் விலையை விவசாயி நிர்ணயிக்கும் உற்பத்திச் செலவு மட்டும் தீர்மானிப்பதில்லை. விதை, உரம், பூச்சிக்கொல்லி, கால்நடைத் தீவனம், மின்சாரம், எரிபொருள், இயந்திரங்கள், பதப்படுத்துதல், குளிர்சாதன சேமிப்பு, பொட்டலமிடுதல், துறைமுகக் கட்டணம், கப்பல் போக்குவரத்து மற்றும் இறுதியாக கடைகளுக்கு கொண்டு செல்லும் தளவாடச் செலவு என உணவு விநியோகச் சங்கிலியில் பல கட்டங்கள் உள்ளன.
இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் செலவு அதிகரித்தாலும், அதன் ஒரு பகுதி அடுத்த கட்டத்துக்கு மாற்றப்படலாம். உதாரணமாக, உரம் மற்றும் கால்நடைத் தீவனத்தின் விலை அதிகரித்தால் விவசாயி அல்லது கால்நடை வளர்ப்பாளரின் உற்பத்திச் செலவு உயரும். எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரித்தால், அந்தப் பொருளைச் சந்தைக்கு கொண்டு வரும் செலவும் அதிகரிக்கும். இதனால், உணவுப் பொருளின் இறுதி விலை உயர்வதற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம் இருப்பதில்லை.
போக்குவரத்துத் தடை ஏற்பட்டால் என்ன நடக்கும்?
உலகின் முக்கிய கப்பல் வழித்தடங்களில் ஏற்படும் நெருக்கடிகளும் உணவுச் சந்தையைப் பாதிக்கக்கூடும். மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, எண்ணெய் மற்றும் உணவு பொட்டலமிடலுக்குத் தேவையான பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தி ஸ்டார் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
கப்பல்கள் தாமதமாகும் போது அல்லது நீண்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், சரக்குக் கட்டணம், காப்பீடு, எரிபொருள் செலவு மற்றும் விநியோக நேரம் ஆகியவை அதிகரிக்கலாம்.

அந்தச் செலவுகள் அனைத்தும் உடனடியாக பயனீட்டாளர்களின் விலையாக மாற வேண்டிய அவசியமில்லை. ஆனால் நெருக்கடி நீடித்தால், விநியோகச் சங்கிலியில் சேரும் கூடுதல் செலவுகள் படிப்படியாகச் சந்தையை அழுத்தத்துக்குள்ளாக்கலாம்.
மலேசியாவை அது எவ்வாறு சென்றடையும்?
இங்குதான் மலேசியாவின் நிலை முக்கியமானதாகிறது. உள்நாட்டில் பல்வேறு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தாலும், மலேசியா அடிப்படை உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய உற்பத்திக்குத் தேவையான சில முக்கிய உள்ளீடுகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளைச் சார்ந்துள்ளது.
பொருளாதார நிபுணரும் புத்ரா பிஸ்னஸ் ஸ்கூலின் வேளாண் பொருளாதார நிபுணருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் நாசீர் ஷம்சுடின், மலேசியா அரிசி, கோதுமை, பால் பொருட்கள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட அடிப்படை உணவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்.
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கறி போன்ற பொருட்களுக்குக்கூட இறக்குமதி செய்யப்படும் தானியச் சோளம் மற்றும் சோயாபீன் போன்ற கால்நடைத் தீவனங்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் விலை எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகளால் அதிகரித்தால், கோழி உற்பத்திச் செலவும் அதன்பின்னர் பயனீட்டாளர்கள் செலுத்தும் விலையும் பாதிக்கப்படலாம் என அவர் விளக்குகிறார்.
இதனால், “உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது” என்பதால் மட்டும் ஒரு உணவுப் பொருள் உலகளாவிய அதிர்ச்சிகளிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுவிடாது.
அரிசி முதல் கோழி வரை — தாக்கம் எங்கே தெரியும்?
அரிசி: முக்கிய உற்பத்தி நாடுகளில் வறட்சி அல்லது வெள்ளம் போன்ற பாதகமான வானிலை ஏற்பட்டால், உலகளாவிய விநியோகம் பாதிக்கப்படலாம். அதே நேரத்தில் உரம், எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உற்பத்திச் செலவில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்: அதிக வெப்பம், வறட்சி, அதிக மழை போன்றவை விளைச்சலைப் பாதிக்கலாம். குறிப்பிட்ட பருவத்தில் உள்நாட்டு விநியோகம் குறைந்தால், இறக்குமதியின் மீதான சார்பு அதிகரிக்கக்கூடும்.
சமையல் எண்ணெய்: உற்பத்தி, பதப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் சர்வதேசச் சந்தை நிலவரம் ஆகியவை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
கோழி மற்றும் முட்டை: கோழிப் பண்ணைகளின் உற்பத்திச் செலவில் கால்நடைத் தீவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தத் தீவனத்துக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், உலகளாவிய விலை மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்நாட்டு உற்பத்திச் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எண்ணெய் விலையைத் தாண்டியும் தாக்கம் இருக்கலாம்
உலகளாவிய விநியோக மற்றும் எரிசக்தி நெருக்கடியை வெறும் எண்ணெய் விலை உயர்வு என்ற கோணத்தில் மட்டும் பார்க்கக்கூடாது என்று தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் (MTEN) கீழ் செயல்படும் நெருக்கடி மேலாண்மை பணிக்குழுவின் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் ஹசான் மெரிகான் கூறியுள்ளார்.
அவரது பார்வையில், தாக்கம் எரிபொருள் மற்றும் தளவாடச் செலவிலிருந்து தொடங்கி, பெட்ரோ இரசாயன மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், உரம் உள்ளிட்ட பல துறைகளுக்குப் பரவி, இறுதியில் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவிலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
உணவுத் துறையைப் பொறுத்தவரை, உரம், பொட்டலமிடுதல், குளிர்சாதன சேமிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற பல கட்டங்கள் எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடையவை என்பதால், இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் எல்லா உணவுப் பொருட்களின் விலையும் ஒரே மாதிரி உயருமா?
அவ்வாறு கருதுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் தனித்தனி உற்பத்தி முறை, விநியோகச் சங்கிலி, இறக்குமதி சார்பு மற்றும் அரசாங்கக் கட்டுப்பாடு உள்ளது. எனவே உலகளாவிய அதிர்ச்சியின் தாக்கம் ஒரு பொருளில் வேகமாகவும் மற்றொரு பொருளில் மெதுவாகவும் தெரியலாம்.
மேலும், அரசாங்கத்தின் கையிருப்பு, மானியங்கள், விலைத் தலையீடுகள், உள்ளூர் உற்பத்தி மற்றும் மாற்று விநியோகஸ்தர்கள் போன்ற காரணிகள் விலை உயர்வின் தாக்கத்தைத் தணிக்கக்கூடும்.
அதனால் “உலகில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது; எல்லா உணவுப் பொருட்களும் உடனடியாக விலை உயரும்” என்ற அச்சம் தேவையற்றது.

பொருளாதார நிபுணர் கூறும் நீண்டகாலப் பாடம்
பேராசிரியர் நாசீரின் பார்வையில், குறுகியகால மானியங்களும் அரசாங்க உதவிகளும் விவசாயிகளின் செலவுச் சுமையைத் தணிக்க உதவினாலும், நீண்டகால உணவு விலை நிலைத்தன்மைக்கு உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் உணவு விநியோக அமைப்பை வலுப்படுத்துவதும் அவசியம்.
இயந்திரமயமாக்கல், துல்லிய விவசாயம், காலநிலைக்கு ஏற்ப தொழில்நுட்பம், அதிக விளைச்சல் தரும் விதைகள், திறமையான பாசன வசதி, அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு மற்றும் ஒருங்கிணைந்த தளவாட அமைப்பு போன்றவற்றில் முதலீடு செய்வது உற்பத்திச் செலவைக் குறைத்து, வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு எதிரான துறையின் தாங்குதிறனை அதிகரிக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.
இதன் பொருள், உணவு விலையைக் கட்டுப்படுத்துவது என்பது சந்தையில் விலையை மட்டும் கண்காணிப்பது அல்ல; உணவு உற்பத்தியின் அடித்தளத்தையே வலுப்படுத்துவது என்பதாகும்.
பயனீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
உலகளாவிய விநியோகத் தடைகளை ஒரு சாதாரண பயனீட்டாளர் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதன் தாக்கத்தைத் தமது குடும்பச் செலவில் குறைக்க சில நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளமான ஃபொம்கா (FOMCA) துணைத் தலைவர் டத்தோ இந்திராணி துரைசிங்கம் கூறுகையில் நெருக்கடி காலங்களில் பொருட்களைப் பதுக்கி வைத்து அதிகமாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பதற்றத்தில் பொருட்களை அதிகமாக வாங்குவது உள்ளூர் சந்தையில் செயற்கையான குறுகியகாலத் தேவையை உருவாக்கி, உடனடி விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என அவர் எச்சரிக்கிறார்.
அதற்கு பதிலாக, குடும்பங்கள் தங்களது தேவையைத் திட்டமிட்டு வாங்குதல், பல்வேறு கடைகளில் விலைகளை ஒப்பிடுதல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் மற்றும் உணவு வீணாவதைத் தவிர்த்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
உள்ளூர் உற்பத்திப் பொருட்களைத் தேர்வு செய்வதும் சில விநியோகச் சங்கிலிகளின் வெளிப்புற சார்பைக் குறைக்க உதவலாம். FOMCA-வும் உள்ளூர் கோழி, மீன் வளர்ப்பு மற்றும் பருவகால உள்நாட்டு விவசாயப் பொருட்களைத் தேர்வு செய்வதைப் பயனீட்டாளர்கள் பரிசீலிக்கலாம் எனக் கூறுகிறது.
ஆனால் இதுவும் முழுமையான தீர்வு அல்ல. உள்ளூர் உற்பத்திக்குக்கூட எரிபொருள், உரம், இயந்திரங்கள், கால்நடைத் தீவனம், பொட்டலமிடுதல் மற்றும் தளவாடங்கள் தேவைப்படுவதால், நீண்டகாலத் தீர்வு உள்நாட்டு உணவு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதில்தான் உள்ளது.
மலேசியாவின் தயார்நிலை ஏன் முக்கியம்?
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் ஒவ்வோர் அதிர்ச்சியையும் மலேசியா தவிர்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
அதற்காக உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரித்தல், பல்வேறு நாடுகளிலிருந்து விநியோகத்தைப் பெறுதல், விவசாய உற்பத்தித் திறனை உயர்த்துதல், உணவுக் கையிருப்பை உறுதி செய்தல் மற்றும் தளவாட அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை.
சமீபத்திய நடவடிக்கைகளில் விவசாயிகளுக்கான எரிபொருள் உதவி மற்றும் நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகைகள் போன்றவை உற்பத்திச் செலவு அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக பேராசிரியர் நாசீர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற குறுகியகால நடவடிக்கைகளுடன், இறக்குமதி சார்பைக் குறைத்து உள்நாட்டு உணவு உற்பத்தியை வலுப்படுத்துவது நீண்டகாலப் பாதுகாப்புக்கு அவசியமாகிறது.
விலை உயர்வை எதிர்பார்ப்பதா? அல்லது தயாராக இருப்பதா?
உலக உணவுச் சந்தையில் ஏற்படும் ஒவ்வோர் அதிர்ச்சியும் மலேசியப் பயனீட்டாளர்களுக்கு உடனடி விலை உயர்வாக மாறுவதில்லை.
ஆனால் ஒரு விஷயம் தெளிவாகிறது — உணவு விலை என்பது வயலில் மட்டும் உருவாகும் ஒன்று அல்ல. வானிலை, உரம், கால்நடைத் தீவனம், எரிபொருள், கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், இறக்குமதி சார்பு என உலகின் பல பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்துள்ள ஒரு நீண்ட சங்கிலியின் இறுதி விளைவு அது.
அந்தச் சங்கிலியில் ஏற்படும் இடையூறு நீடித்தால், அதன் தாக்கம் படிப்படியாக மலேசியப் பயனீட்டாளர்களின் செலவிலும் பிரதிபலிக்கலாம்.
எனவே எதிர்காலத்தில் உலக உணவுப் பொருட்களின் விலை குறித்து அச்சப்படுவதைவிட, விநியோகச் சங்கிலியைப் புரிந்து கொள்வதும், உள்நாட்டு உணவு உற்பத்தியை வலுப்படுத்துவதும், பயனீட்டாளர்கள் மட்டத்தில் சிக்கனமான மற்றும் பொறுப்பான முடிவுகளை எடுப்பதுமே சிறந்த தயார்நிலை.









