நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் வட்டார இந்தியப் பெருமக்களின் பல தசாப்த கால பெரும் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்த நவீன மின் சுடலை அமைக்கும் திட்டம் தற்போது உறுதியான வடிவம் பெற்றுள்ளது. தம்பின், புக்கிட் ஜாலோர் இந்து மயானப் பகுதியில் அமையவிருக்கும் இந்த புதிய மின் சுடலைக்கான கட்டுமானப் பணிகள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பன் தலைமையில் அண்மையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டு காலமாகப் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் நிலுவையில் இருந்து வந்த இத்திட்டம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நேரடியாக வழங்கிய பிரத்யேக மத்திய அரசு நிதியின் மூலமாகவே தற்போது சாத்தியமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த உடனடி நிதி ஒதுக்கீடு மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசின் தொடர் முயற்சிகளால் தம்பின் வட்டார மக்களின் நீண்டகாலத் துயரத்திற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இது குறித்து பூமி பூஜை மற்றும் கட்டுமானத் தொடக்க விழாவில் பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன், இத்திட்டத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் ஆழமாக எடுத்துரைத்தார். தம்பின் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதுவரை மின் சுடலை வசதி இல்லாத காரணத்தால், இப்பகுதி மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிரேதங்களை மின் தகனம் செய்வதற்குப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இனி வரும் காலங்களில், தம்பின் வட்டார மக்கள் இந்தியர்களின் பிரேதங்களை நவீன முறையில் தகனம் செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு மலாக்கா மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அதே போல் மற்றொரு திசையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து சிரம்பானுக்கு அலைய வேண்டியதில்லை என்றும் வீரப்பன் தெரிவித்தார். இந்த மின் சுடலை வளாகம் கட்டி முடிக்கப்படும் போது, தம்பின் மற்றும் அதன் அருகாமையில் உள்ள தோட்டப்புற மக்கள் தங்களின் இறுதிச் சடங்குகளைத் தங்களின் சொந்த வட்டாரத்திலேயே மிகக் குறைந்த செலவிலும், மன அமைதியுடனும் செய்து கொள்ள வழிவகை ஏற்படும்.
சமூக மேம்பாடுகளுக்கு இணையாக, இந்தியர்களின் நீண்டகால மயானப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் ஏற்கனவே ஒரு மாபெரும் தேசியத் திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி, நாட்டில் உள்ள 5 முதல் 6 மாநிலங்களில் (கெடா, ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு உள்ளிட்ட மாநிலங்கள்), மின் சுடலை வசதிகள் இல்லாத எட்டு முக்கிய இடங்களில் மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய நவீன மின் சுடலைகளை நிர்மாணிப்பதற்கான பிரத்யேக நிதி ஒதுக்கீட்டைப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் அவர்களின் இந்த 20 மில்லியன் ரிங்கிட் தேசியத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, தற்போது தம்பின் புக்கிட் ஜாலோர் மின் சுடலைத் திட்டமும் மிக வேகமாக நனவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி இறுதிச் சடங்குகளுக்கான மரியாதையையும் உறுதிச் செய்யும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மத்திய-மாநில அரசுகள் எடுத்து வரும் இத்தகைய முற்போக்கான நடவடிக்கைகள், நெகிரி செம்பிலான் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.









