10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக். 8-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு அணிகளும் சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பயிற்சி ஆட்டத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்பாடு செய்துள்ளது.
எல்லா ஆட்டங்களும் பகல்-இரவு மோதலாக நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை போட்டியையொட்டி இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீரர்கள் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் அருமையான வாய்ப்பாக இருக்கும். ஆட்டத்தின் போது 15 வீரர்களையும் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை கவுகாத்தியில் செப்டம்பர் 30-ந்தேதி சந்திக்கிறது.
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் அக்டோபர் 3-ந்தேதி திருவனந்தபுரத்தில் மோதுகிறது. வங்காளதேசம்- இலங்கை, தென்ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-நெதர்லாந்து, இங்கிலாந்து-வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான்- இலங்கை, பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா ஆகியவை மற்ற பயிற்சி ஆட்டங்களாகும். பாகிஸ்தான் அணிக்குரிய பயிற்சி ஆட்டங்கள் இரண்டும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. பயிற்சி ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.