வரும் அக்டோபரில் அனைத்துலக ஃபார்முலா 1 பந்தயம் சிப்பாங், அனைத்துலக சிர்கட் தளத்திற்குத் திரும்பும் நிலையில், மலேசிய ரசிகர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடிச் சலுகையை அறிவித்துள்ளார்.
மைகாட் வைத்துள்ள மலேசியர்கள், மூன்று நாட்களுக்கான சிறப்பு மடானி டிக்கெட்டுகளை 200 ரிங்கிட் முதல் வாங்கி, போட்டியை நேரில் காணலாம்.
அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அனைத்துலகப் போட்டிக்கான சிறப்பு டிக்கெட்டுகள், இருக்கை வகையைப் பொறுத்து 200 முதல் 2,083 ரிங்கிட் 40 சென் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் குறைந்த விலையிலான ஹில்ஸ்டாண்ட் ஜி டிக்கெட் 200 ரிங்கிட்டாகும். கிரான்ஸ்டாண்ட் எஃப், கே1 மற்றும் மேய்ன் கிரான்ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் முறையே 1,291 ரிங்கிட் 40 சென், 1,386 ரிங்கிட் மற்றும் 2,083 ரிங்கிட் 40 சென் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஃபார்முலா 1 பந்தயத்தை நேரில் காணும் வாய்ப்பை அதிகமான மலேசியர்களுக்கு வழங்குவதே இந்த மடானி டிக்கெட் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.








