Sep 13, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகள் "வெளிநாட்டவர் போல்" இருந்ததால் கைவிட்ட கொரிய தம்பதிக்கு இடைக்கால சிறைத்தண்டனை!
உலகச் செய்திகள்

குழந்தைகள் "வெளிநாட்டவர் போல்" இருந்ததால் கைவிட்ட கொரிய தம்பதிக்கு இடைக்கால சிறைத்தண்டனை!

Share:

தங்களுக்குப் பிறந்த இரு குழந்தைகள் "வெளிநாட்டவர் போல்" தோற்றமளித்ததால் அவர்களை அனாதை இல்லத்தில் கைவிட்ட தென்கொரிய தம்பதியினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குழந்தை நலச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக, தாய்க்கு 3 ஆண்டுகள் தகுதிகாண் காலத்துடன்18 மாதங்கள் சிறைத்தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் தகுதிகாண் காலத்துடன் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து உய்ஜியோங்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2005 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் இத்தம்பதியினருக்குப் பிறந்த இரு குழந்தைகளும் கலப்பினத் தோற்றத்தில் இருந்ததால், தங்களுக்கு அவமானம் ஏற்படும் என அஞ்சி, பிறந்த சில காலத்திலேயே வெவ்வேறு காலகட்டங்களில் அனாதை இல்ல வாசலில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் தெரியாமல் இருந்த இந்தக் கொடூரக் குற்றம், தென்கொரிய அரசாங்கம் சமீபத்தில் நடத்திய நாடு தழுவிய பிறப்புப் பதிவு தணிக்கையின் போது வெளிச்சத்திற்கு வந்தது. தம்பதியினர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த இடைக்காலத் தண்டனையை வழங்கியுள்ளது.

Related News