மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
சர்வதேச எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அச்சுறுத்தல் கொடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில் பேசுகையில், ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துவத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








