Oct 2, 2026
Thisaigal NewsYouTube

அமெரிக்காவில் 'பாம் சைக்ளோன்': 5.5 கோடி பேர் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமெரிக்காவில் 'பாம் சைக்ளோன்': 5.5 கோடி பேர் பாதிப்பு

நியூயார்க், டிசம்பர்.03-

அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்கள் பனியில் மூழ்கியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாகி உள்ளது. இது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர பனி புயலாகும். இதில் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் தொடங்கி மார்ச் வரை குளிர்காலம் நீடிக்கும். இந்தச் சமயத்தில் அமெரிக்காவைக் கடும் பனிப்புயல்கள் தாக்கும். வெப்பநிலை மைனஸ் 10 முதல் மைனஸ் 25 டிகிரி செல்ஷியஸ் வரை சரியும். நியூயார்க், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே போன்ற வட கிழக்கு மாகாணங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு பனிப்புயல்கள் அமெரிக்காவைத் தாக்கி உள்ளன. 33 சதவீத பரப்பை பனி மூடியுள்ளது. தற்போது வீசும் பனிப்புயலால், கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது. செயின்ட் லுாயிஸ் நகரில் பனி படர்ந்ததன் காரணமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பல விபத்துகள் ஏற்பட்டன. மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பனிப்புயல் ஒன்று அதி தீவிர பனிப்புயலாக உருவாகியுள்ளது. காற்றின் அழுத்தம் மில்லிபார் என்ற அளவீட்டின்படி கணக்கிடப்படுகிறது. 24 மணி நேரத்தில் 24 மில்லிபார் அளவுக்கு காற்றழுத்தம் குறைந்தால் அது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர புயலாகக் கருதப்படும். அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பயணங்களை தவிர்க்கவும், உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை சேமிப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →