அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்துள்ளது. அதே சமயம், முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பியதால் அதன் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 8, புதன்கிழமை காலை நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 14.7 விழுக்காடு குறைந்து ஒரு பீப்பாய் 93.20 அமெரிக்க டாலராக பதிவானது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் எண்ணெய் விலை 15.1 விழுக்காடு சரிந்து 93.20 டாலராக நிலைபெற்றது.
ஈரான் மீதான தாக்குதல்களை இரு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அறிவித்த திரு. டிரம்ப், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீரிணை மூடப்பட்டிருந்த காரணத்தால், இதற்கு முன்னதாக அமெரிக்காவில் எண்ணெய் விலை சுமார் 70 விழுக்காடு வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் விலை குறைந்தாலும், தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை 3.1 விழுக்காடு அதிகரித்து 4,850 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 8.02 மணிக்கு இதன் விலை 4,849.01 டாலராகப் பதிவானது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களின் விலையும் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு, பங்குகளின் விலை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








