May 27, 2026
Thisaigal NewsYouTube
250 வனவிலங்குகளைத் தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்குக் கடத்த முயன்ற மலேசியர் கைது
உலகச் செய்திகள்

250 வனவிலங்குகளைத் தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்குக் கடத்த முயன்ற மலேசியர் கைது

Share:

பேங்காக், மே.27-

பேங்காக், சுவர்ணபூமி விமான நிலையத்தில், 250-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை உயிருடன் இந்தியாவிற்குக் கடத்த முயன்ற மலேசியர் ஒருவரைத் தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 24-ம் தேதி, மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுச் சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து தேசியப் பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல அமலாக்க அமைப்புகள் ஈடுபட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

34 வயதான சந்தேக நபர் அதிகாலை 3.45 மணியளவில் விமான நிலைய புறப்பாட்டு பகுதியில் உள்ள நுழைவாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அந்நபர் தாய்லாந்திலிருந்து இந்தியாவின் கொல்கத்தா நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கிப் பயணம் செய்ய இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, அவரது பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட உயிருடன் இருந்த வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் இரண்டு helmeted hornbill பறவைகள், இரண்டு Patagonian mara வகை எலிகள், 62 iguana-க்கள், 5 மானிட்டர் வகைப் பல்லிகள், 100 நீல நாக்கு ஓணான்கள் மற்றும் 80 நன்னீர் ஆமைகள் இருந்ததாகவும் அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2019, சுங்கச் சட்டம் 2017, விலங்கு தொற்று நோய் சட்டம் 2015 மற்றும் மீன்வள அரசாணை 2015 ஆகிய சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

Related News