Sep 13, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: இன்னும் சமரசம் சாத்தியமே என்கிறார் டிரம்ப்!
உலகச் செய்திகள்

மூன்றாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: இன்னும் சமரசம் சாத்தியமே என்கிறார் டிரம்ப்!

Share:

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து மூன்றாவது இரவாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இருப்பினும், ஈரானுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவது இன்னும் சாத்தியமே என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தாக்குதல்களும் பதற்றமும்:

அமெரிக்க மத்திய கட்டளைகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, ஓமான் கடல் பகுதியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஒரு ஊழியர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என்றும், பாதுகாப்பு வழங்குவதற்காக அங்குக் கடக்கும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்பின் சமரசப் பேச்சு:

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள போதிலும், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "ஈரானுடன் உடன்பாடு ஏற்படுவது இன்னும் சாத்தியம் என்று நான் நம்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஒப்பந்தத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர், ஆனால் பின்னர் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று பின்வாங்கினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், அமெரிக்காவுடன் கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட ஒப்பந்தம் தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருதரப்பு மோதலைக் குறைக்க கத்தார், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் தொடர்ந்து மத்தியஸ்தம் பேசி வருகின்றன.

Related News