Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்
உலகச் செய்திகள்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

Share:

தேர்தல் காலங்களில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தவும், தேர்தல் நேர்மையைப் பேணவும் ஜப்பானிய நாடாளுமன்றம் புதிய சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படங்கள் மற்றும் காணொலிகளைப் பதிவிடும் பயனர்கள், அது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், தேர்தல் வேட்பாளர்கள் குறித்துப் பொய்யான அல்லது திரித்துக் கூறப்பட்ட தகவல்களை இணைய பயனர்களோ அல்லது சமூக ஊடகத் தளங்களோ பரப்பக் கூடாது என்றும் இச்சட்டம் தடை விதித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைத்துவப் போட்டியிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், வேட்பாளர்களைக் களங்கப்படுத்த AI தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டே இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த சட்டத் திருத்தங்கள் வரும் மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைச் சட்டத்தைப் போலன்றி, ஜப்பானின் இந்த புதிய விதிகளில் இணங்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் அதிகாரிகளிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சமூக ஊடகத் தளங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை ஜப்பான் அரசாங்கம் வகுக்கும் என்றும், அதன் செயல்பாடுகள் ஆண்டுதோறும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் ஜனநாயகத் தேர்தலின் புனிதத்தன்மை ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்குவதே இந்த புதிய விதிகளின் நோக்கம் என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News