Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- விசாரிக்க உத்தரவு
சினிமா

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- விசாரிக்க உத்தரவு

Share:

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் பார்க்கிங் வசதி, குடிக்க தண்ணீர் என அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். ரசிகர்கள் பலரும் இசை நிகழ்ச்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார். அதாவது, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதில் , 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று குறிப்பட்டுள்ளது.

ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசிகர்கள் வந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் மாநகரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இந்த நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News