தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார். அவருக்கு வயது 75. தேவாவின் மறைவு செய்தி, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா மாரடைப்பால் காலமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்ஷா, அண்ணாமலை, ஆசை, காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களுக்குப் புகழ்பெற்ற பாடல்களை அமைத்தவர் தேவா. கிராமிய இசை, கானா பாடல்கள், காதல் மெட்டுகள் எனப் பல்வேறு இசை வடிவங்களில் தனித்துவமான முத்திரையைப் பதித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கியவர் ஆவார்.
குறிப்பாக கானா பாடல்கள், சென்னையின் பட்டிதொட்டிகளில் மட்டும் ஒலித்து வந்த இசையை, திரையிசைப் பாடல்கள் மூலம் உலகப்புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இசையமைப்பாளர் தேவாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தேனிசைத் தென்றல் என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட தேவா, மலேசியாவில் பினாங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து அளித்து, ஏகோபித்த ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.








